Thursday, August 11, 2011

பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பது ஏன்?'


பிரபல டெலிவிஷன் செய்தி வாசிப்பாளர் சவுதாமணி, `திருமணமான இந்திய பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பது ஏன்?' என்று விளக்குகிறார்.
"நமது சமூகமும், குடும்ப கட்டமைப்புகளும் திருமணமான பெண் 24 மணிநேரமும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடவேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. அவள் அதிகாலையில் எழுந்து, கணவருக்கு டீ, மாமியாருக்கு காபி, பிள்ளைகளுக்கு ஏதாவது இன்னொரு பானத்தை சுடச்சுட தயாரித்து கொடுத்து விட்டு, மின்னல் வேகத்தில் அடுத்த வேலைக்கு செல்லவேண்டும். காலை உணவு இட்லியோ, தோசையோ என்றால் புருஷன் காரச் சட்னி கேட்பார். பிள்ளைகள் சாம்பார் கேட்பார்கள். மாமியார் இரண்டையும் ருசித்து விட்டு `அதில் காரமில்லை.. இதில் உப்பு இல்லை..' என்று கூறுவார். அடுத்து கணவரும் குறை சொல்ல வாய் திறக்க, அவளுக்கு காலையிலே மன அழுத்தம் ஆரம்பித்துவிடும்.  
அந்த அழுத்தத்தை சுமந்துகொண்டு அவள் அலுவலகம் சென்றால், மேலதிகாரி அவர் வேலையையும் சேர்த்து அவள் தலையில் கட்டுவார். அதையும் செய்ய வேண்டும். இப்போதெல்லாம் சம்பாதிக்கும் பெண் வேண்டும் என்றுகூறி திருமணம் செய்துகொள்ளும் கணவர்கள், ரொம்ப புத்திசாலித்தனமாக எல்லா கடன்களையும் மனைவி பெயரிலே வாங்கி விடுகிறார்கள். அதனால் அவள் சம்பளத்தின் பெரும்பகுதி கடனுக்கே கரைந்து விடுகிறது. இது அவளுக்கு எதிர் காலத்தைப்பற்றிய கவலையை உருவாக்கி மன அழுத்தத்தை அதிகரிக்கவைக்கிறது.

அம்மாக்களின் உடல்நிலை, மனநிலை, பொருளாதாரநிலை போன்ற எதைப் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்பாத பிள்ளைகள், பள்ளிக்கூடத்தில் சக மாணவர்கள் எப்படி எல்லாம் பணத்தை வாரி செலவு செய்கிறார்களோ அதுபோல் செய்ய தங்களுக்கும் பணம் வேண்டும் என்று கேட்டு அடம்பிடிப்பார்கள். பிள்ளைகள்கூட தன்னை புரிந்து கொள்ளவில்லையே' என்று தாய் மனம் விம்முகிறாள். இன்றைய குழந்தைகள் குண்டாக வளர்கிறார்கள். அதனால் தாயிடம், தந்தை `ஏன் இப்படி குண்டு குண்டாய் குழந்தைகளை பெற்று வைத்திருக்கிறாய்?' என்று, பொறுப்பற்ற விதமாய் பேசுவார்.

குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க அவைகளிடம் `இரவில் சப்பாத்தி சாப்பிடுங்கள்' என்று தாய் சொன்னால், பிள்ளைகள் கண்களை கசக்கும். உடனே மாமியார் தலையிடுவார். `இந்த சின்ன வயசிலே உணவுக்கட்டுப்பாடு அவசியமா?' என்று மருமகளை கடிந்துகொள்ளும் அவர், குழந்தைகளை தன் அருகில் அழைத்து நெய்யை நிறைய ஊற்றி மொறு மொறுவென்று தோசை வார்த்துகொடுப்பார். குழந்தைகள் மேலும் குண்டாகிவிடுமே என்ற கவலை தாய்க்கு வரும். கூடவே அவளுக்கு மன அழுத்தமும் வரும். ஏன்என்றால் அவள் சர்க்கரை நோய், கொலாஸ்ட்ராலோடு உடற்பயிற்சி செய்யக்கூட நேரமின்றி வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருப்பாள்.

பெண்களின் வாழ்க்கையே இப்படி மன அழுத்தக் களமாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது. பெண்கள் குடும்பத்திற்காக கரையும் மெழுகுவர்த்தியாக இல்லாமல் தன் உடல், மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். `நடப்பதெல்லாம் நன்மைக்கே' என்று நினைத்துக்கொண்டு எதற்கும் வருந்தாமல் யோகாசனம், தியானம் போன்றவைகளை தினமும் செய்துவரவேண்டும். நல்ல பொழுதுபோக்குகளிலும் ஈடுபடவேண்டும். 24 மணிநேரத்தில் தினமும் 2 மணிநேரத்தையாவது பெண்கள் தங்களுக்காக செலவிடவேண்டும். அப்படிச் செய்தால் மனஅழுத்தம் ஏற்படாது. ஏற்பட்டாலும் விரைவாக அதில் இருந்து மீண்டு விடலாம்'' - என்கிறார்.
thanks: உங்களுக்காக

1 comment:

  1. unmayei solli irukkum ungalukku nandri

    Madurai Nanban

    ReplyDelete