Thursday, August 11, 2011

இந்தியாவை மிரட்டும் மனஅழுத்தம்...


ஆன்மிகத்தில் தலைசிறந்த நாடு. மகிழ்ச்சியான குடும்ப உறவுகளுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் நாடு. உடலுக்கும், மனதுக்கும் நலம் பயக்கும் யோகாசனம், தியானம் போன்றவை உருவான நாடு. ஞானிகளும், முனிவர்களும் வாழ்வியல் தத்துவங்களை வகுத்தளித்த நாடு. இந்த வரிசையில் இன்னும் பல சிறப்புகள் வாய்ந்த இந்தியாவில் மகிழ்ச்சியும், மனநிறைவும், அன்பும், ஆனந்தமும்தான் பொங்கி வழிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் "உலகத்திலே மிக அதிக அளவில் துயரமும், கண்ணீரும், வேதனையும், விரக்தியும்தான் பொங்கிவழிந்து கொண்டிருக் கிறது'' என்கிறது, `உலக சுகாதார நிறுவன' ஆய்வு.

18 நாடுகளில் 89 ஆயிரம் பேரிடம் எடுத்த ஆய்வில் இந்தியர்கள் 36 சதவீத பாதிப்புடன் உலகில் மனஅழுத்தம் கொண்டவர்களில் `நம்பர்- ஒன்' இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். நெதர்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, சீனாவை எல்லாம் இந்தியா இந்த விஷயத்தில் பின்னுக்கு தள்ளியிருக்கிறது. இந்தியாவுக்கு ஏன் இந்த நிலை? இதற்கு என்னதான் தீர்வு?


"இந்தியர்களுக்கு மனஅழுத்தம் அதிகரித்துவிட்டது என்பது வீடுகளில் தெரிகிறது. வீதிகளில் தெரிகிறது. அலுவலகங்களில் தெரிகிறது. ஆஸ்பத்திரிகளிலும் தெரிகிறது. மக்களை உடனடியாக அதில் இருந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..'' என்கிறார், டாக்டர் சூர்யா ஸ்ரீகுமார்.

சென்னை நகர சாலையில் நான் தினமும் கார் ஓட்டிச்செல்கிறேன். சிவப்பு விளக்கு விழுந்ததும் நான் நிற்கிறேன். பச்சை விளக்கு சிக்னலில் கடக்கும் வாகனங்களை செல்ல விடாமல் என் ஓரத்தில் இருபுறமும் நின்றுகொண்டிருக்கும் வாகனங்கள் விதிகளை மீறிச் செல்கின்றன. பச்சை சிக்னலில் வந்துகொண்டிருப்பவர்கள் கதிகலங்குகிறார்கள். இப்படி விதிகளை மீறி பாய்கிறார்களே என்று நான் அதிர்ந்துபோய் உட்கார்ந்திருக்கும்போது என் பின்னால் நின்றுகொண்டிருந்த போக்குவரத்துக் கழக பஸ்சின் டிரைவர் நிறுத்தாமல் `ஹார்ன்' அடித்து, என்னையும் விதிகளை மீறச்சொல்லி செய்கையால் மிரட்டுகிறார். அந்த செயல் அங்கே வாகனங்களில் நின்றுகொண்டிருக்கும் அத்தனை பேரையும் மன அழுத்தத்திற்குள் தள்ளுகிறது. காலையில் வீட்டில் இருந்து கிளம்பும் ஒருவர் இந்த சாலைப் பயணத்தில் தப்பித்து எந்த சேதமும் இன்றி இரவு வீடு போய்ச் சேருகிறார் என்றால் அது மகாபெரிய அதிர்ஷ்டம்தான்.


27 வயது விதவைப் பெண்ணிடம், `உன் கணவர் எப்படி இறந்தார்?' என்று கேட்டால் அவள், சாலை விபத்தில் இறந்ததாகச் சொல்கிறாள். 5, 6 வயது குழந்தைகளிடம், `உங்கள் அப்பா எப்படி இறந்தார்?' என்று கேட்டால், `சாலை விபத்தில் இறந்ததாகக்கூறி' அவைகளும் அழுகின்றன. என்ன காரணம்? எல்லா வாகனங்களையும் தான் முந்திச்செல்ல வேண்டும் என்ற சுயநலம். யாரோ சிலருடைய சுயநலம் சாலையில் செல்லும் மற்றவர்களையும் பாதிக்கிறது. இந்த சுயநலம்தான் ஒருவர் மனஅழுத்தத்தை நோக்கிச் செல்வதற்கான முதல்படி.


ரோட்டை ஒரு மூதாட்டி கடந்து போனால், அவளுக்காக வாகனத்தை நிறுத்த யாருக்கும் மனமில்லை. இந்தியா கல்வி அறிவில் உயர்ந்துவிட்டது. யாரைப் பார்த்தாலும் மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாகச் சொல்கிறார்கள். பணப்புழக்கமும் அதிகரித்துவிட்டது. சந்திரனுக்கு ராக்கெட் விட்டு விஞ்ஞானத்திலும் வளர்கிறோம். ஆனால் மனதளவில் இந்தியர்களின் நிலை தாழ்ந்துகொண்டே இருக்கிறது. அதனால்தான் இந்தியா மனஅழுத்தத்தின் உச்சத்திற்கு போய் இருக்கிறது.


கவலை எல்லோரையும் ஆட்கொண்டிருக்கிறது. அதற்கு காரணம், அளவுக்கு மீறிய ஆசை. அந்த ஆசையை அடையமுடியாமல் விரக்தியடைகிறார்கள். திருப்தி என்பது யார் வாழ்க்கையிலும் இல்லை. முன்பெல்லாம் கடன் வாங்குவதை ஒரு கவுரவக் குறைச்சலாக நினைத்தார்கள். இன்று கடனுக்கு கையேந்துவது பேஷன் ஆகிவிட்டது. காலையில் எழுந்ததும் போன் போட்டு, கடன் வேண்டுமா என்று கேட்டு, கடன் என்ற படுகுழியில் தள்ள நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. கையில் காசே இல்லாமல் `கார்டை' தேய்த்து ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரே நேரத்தில் கடன் வாங்கிவிடுகிறார்கள். அதை ஒழுங்காக செலுத்த முடியாமல் கவலைப்பட்டு, கண்ணீர்விட்டு மனஅழுத்தம் கொள்கிறார்கள்.


குழந்தைகளுக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுத்து, அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டியவர்கள் பெற்றோர். அடுத்து ஆசிரியர்கள். இவர்கள் இருவரும் சரியான பயிற்சி கொடுத்தால் மனஅழுத்தம் இன்றி குழந்தைகள் மனநிறைவோடு வாழ வழி கிடைக்கும். ஆனால் இன்று வீடும், கல்வி நிறுவனங்களுமே தன்னிலை மறந்து, சிறுவயதிலே பிள்ளைகளிடம் மனஅழுத்தத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.


தெரிந்தோ, தெரியாமலோ தப்புகளை செய்துவிட்டு குற்ற உணர்வால் தத்தளிக்கிறவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். மது அருந்தாதே, டிஸ்கோ போகாதே, இரவில் ஊர் சுற்றாதே என்று இளைஞர்களிடமும், இளம் பெண்களிடமும் பெற்றோர் சொல்லித்தான் அனுப்புகிறார்கள். ஆனால் அதை எல்லாம் செய்துவிட்டு சமூகத்திற்கும், பெற்றோருக்கும் பயந்து குற்றஉணர்வுடன் தூக்கமின்றி வாழ்கிறார்கள். தூக்கமின்மையால் வேலையை பார்க்க முடியாது. செயல்பாடு குறையும். ஆரோக்கியம் குறையும். அது கொஞ்சமாக இருக்கும் தூக்கத்தையும் கெடுத்து மன அழுத்தம், மனநோயாளி என்ற நிலைக்கு கொண்டுசென்றுவிடும்.


இப்போதைய ஆய்வுகள் எல்லாமுமே பெண்களே அதிக மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக கூறுகின்றன. உண்மைதான். முன்பு பெண்கள் குடும்ப நிர்வாகத்தை கவனித்துக் கொண்டு கணவருக்கு குழந்தைகளுக்கு எல்லாமுமாக இருந்தார்கள். இப்போது அதையும் செய்துகொண்டு கூடுதலாக பணம் பண்ணும் இயந்திரமாகவும் அவள் செயல்பட வேண்டியதிருக்கிறது. 8 மணிநேரம் அலுவலக வேலை. போய், வர 2 மணிநேரம். 6 மணிநேரம் தூக்கம். மீதமுள்ள 8 மணிநேரத்தில் அவள், தனது பாட்டி 24 மணிநேரத்தில் செய்த வீட்டு வேலைகளை எல்லாம் செய்து தீர்க்க வேண்டியதிருக்கிறது. பின்பு எப்படி அவளுக்கு மனநெருக்கடி ஏற்படாமல் இருக்கும்? அவளுக்கு மனநெருக்கடி வந்துவிட்டால் கணவரிடம் காட்டுவாள். குழந்தைகளிடம் காட்டுவாள். அவர்கள் பதிலுக்கு கோபப்படுவார்கள். இப்படி குடும்பம் குடும்பமாக கொத்துகொத்தாக மன அழுத்தத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள்'' என்கிறார் அவர்.
thanks: உங்களுக்காக 

No comments:

Post a Comment