அட அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா...! இந்த என்ற வாசகம் பெரும்பாலோர் அடிக்கடி உச்சரிப்பதாகும். அதை அட்சரம் பிசகாமல் காட்டியுள்ளார் புதுவை முதல்வர் ரங்கசாமி. தேர்தலுக்கு முன்பாக காங்கிரசிலிருந்து விலகிய அவர், என்.ஆர். காங்கிரஸ் என தனிக்கட்சி தொடங்கி, எனது கட்சி யாருடனும் கூட்டணி சேராது என்று சொன்னார். சொல்லிய அடுத்த நாளே அந்தர் பல்டியடித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து, கூட்டணியும் அமைத்துக் கொண்டார். அப்போதே இவர் மீதான நம்பகத்தன்மை ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது.
பின்பு தேர்தல் களத்தில் இவருக்காக பிரச்சாரம் மேற்கொண்ட ஜெயலலிதா, என்.ஆர். காங்கிரஸ்-அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால், ரங்கசாமி தான் முதல்வர் என்று பெருந்தன்மையாக அறிவித்தார்.
இதில் 17தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 15இடங்களில் வெற்றிபெற்றது. 10இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க. 5 இடங்களை பிடித்தது.
இந்தநிலையில் 2தொகுதிகளில் போட்டியிட்ட ரங்கசாமி தனது இந்திராநகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பலம் 14ஆக குறைந்தது. எனவே போதிய பலமில்லாததால் அதிமுக ஆதரவுடன் கூட்டணி மந்திரிசபை அமைப்பார் என பரவலாக எதிர்பார்த்த நிலையில், அ.தி.மு.க. தயவு இல்லாமல் சுயேச்சை ஆதரவுடன் ரங்கசாமி ஆட்சி அமைத்தார்.
அதுவும் அதிமுக வேட்பாளரை தோற்கடித்த சுயேட்சை எம்.எல்.ஏ ஆதரவை பெற்றதும், அதிமுகவை புறந்தள்ளியதும் தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடும் கோபத்தை தரவே, 'ரங்கசாமி துரோகம் செய்து விட்டார்' என்று கடுமையாக விமர்சித்தார். ஆனாலும் அவரது விமர்சனம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், இப்போது எந்த காங்கிரஸை விட்டு வெளியேறி தனிக்கட்சி கண்டாரோ, காங்கிரசுக்கு எதிரான அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்டாரோ, அந்த காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாவை இவர் தில்லியில் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரது அரசு பதவியேற்று இரு மாதங்களை தொடும் நிலையில் இன்னும் முழுமையாக மந்திரிகளை நியமிக்கவில்லை என்பதோடு சபாநாயகர் தேர்தலைக் கூட இரு தினங்களுக்கு முன் நடத்தியுள்ள ரங்கசாமி, சோனியாவை சந்தித்தது அக்கட்சியின் ஆதரவை பெறுவதற்கே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அதிமுக எதிர்கட்சியாக செயல்படத் தொடங்கி விட்ட நிலையில், சபாநாயகர் தேர்தல் உள்பட பல்வேறு விஷயங்களில் ஆளும்கட்சியின் பலத்தை எதிர்க்கட்சிகள் சோதிக்ககூடும் என்பதால்தான் சோனியாவை சந்தித்தார் என்றும், ஆனால் எதிர்பாராத விதமாக சபாநாயகர் தேர்தலில் எதிர்கட்சிகள் பங்கேற்கவில்லை என்பதால் முதல் சோதனையில் முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்று விட்டாலும், என்.ஆர்.காங்கிரசுக்கு 14எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில் காங்கிரசுக்கு உள்ள 7 பேரின் ஆதரவு கிடைத்தால் ஆட்சிக்கு பலம் என அவர் கருதுகிறார்.
மேலும் மத்திய அரசு ஆதரவு இருந்தால்தான் ஆட்சியை நிம்மதியாக நடத்த முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு, கட்சியுடன் இணக்கமாக நடந்துகொள்ள முதல்அமைச்சர் ரங்கசாமி முடிவு செய்துள்ளார் என்பதுதான் சோனியா சந்திப்பின் மூலம் விளங்கமுடிகிறது என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.
இதன்படி காங்கிரஸ் ஆதரவுடன் ரங்கசாமி தனது அரசை நடத்த முற்படுவாரானால், ஜெயலலிதா கூறியபடி அவர் துரோகம் செய்துவிட்டார் அதிமுகவுக்கு மட்டுமல்ல; புதுவை மக்களுக்கும் தான்.
No comments:
Post a Comment