Wednesday, July 27, 2011

இதய செல்களை உயிர்பிக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை...!


இதயம் தனக்குத் தானே பழுதுநீக்கிக்கொள்ளும் முறையை இங்கிலாந்து ஆய்வாளர் பால் ரைலி கண்டுபிடித்துச் சாதனை படைத்துள்ளார். இதுதொடர்பாக, எலியின் இதயத்தில் அவர் ஆய்வு செய்துள்ளார். அதில், ஸ்டெம் செல்லை இடம்மாற்றம் செய்வதன் மூலம், சேதம் அடைந்த செல்கள் தாங்களாகவே தங்களைச் சீர்படுத்திக் கொள்ளச் செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளார்.


இந்த ஆய்வு ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது, இதை மனிதர்களுக்கு நடைமுறைப்படுத்தச் சில ஆண்டுகள் ஆகலாம் என்றபோதும் இது மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். எதிர்காலத்தில், மாரடைப்பு போன்றவற்றால் இதயத்தில் பாதிப்பு ஏற்படும்போது இம்முறை மூலம் அதைச் சீர்ப்படுத்தலாம். அதற்கான தூண்டுதலுக்காகவும், ஒழுங்குபடுத்துவதற்காகவும் சிறிது மருந்து எடுத்துக்கொண்டால் போதும்.

தற்போது மருத்துவத் துறையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தால், மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இதயத் திசுக்கள் இறந்தால் அதைச் சரிசெய்யமுடியாத நிலையே இன்றும் இருக்கிறது.  இறந்த செல்களின் அளவு அதிகரிக்கும்போது, உடம்புக்குப் போதுமான ரத்தத்தைச் செலுத்த முடியாமல் இதயம் செயலிழக்கிறது.

பாதிக்கப்பட்ட திசுக்களை உயிர்ப்பிக்க தற்போது விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இப்போதைக்கு, இதயம் செயலிழக்கும் நிலையை அடைந்தவர்கள் செயற்கை உபகரணத்தையோ, மாற்று இதயத்தையோதான் நம்பியிருக்க வேண்டியுள்ளது.

அதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட திசுக்கள் மீண்டும் தாங்களாகவே சரிசெய்யும் முயற்சியில்தான் ஆய்வாளர் ரைலியின் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக, இதயத்தின் வெளி அடுக்கான பெரிகார்டியத்தில் காணப்படும் குறிப்பிட்ட செல்களை அவர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
நன்றி: உங்களுக்காக

No comments:

Post a Comment