Saturday, July 16, 2011

ஆதரவற்ற விதவைகளுக்கு அரசாங்க உதவித் திட்டம்!


ஆதரவற்ற முதியோர்களுக்கு அரசு உதவி செய்வது போலவே, ஆதரவற்ற விதவைகளின் எதிர்காலம் இருண்டு போய்விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அரசு செயல்படுத்தும் திட்டம் இது. எதிர்பாராத விதமாக கணவனை இழந்து, வாழ்க்கையில் தடுமாறிக் கொண்டிருக்கும் விதவை பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.

இந்த திட்டத்தில் கிடைக்கும் உதவி என்ன?

இதுவரை இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.200/& உதவித் தொகையாக அரசு வழங்கி வந்தது. தற்போது பதவியேற்றிருக்கும் புதிய அரசு இந்த உதவித் தொகையை மாதம்தோறும் ரூ.400/&ஆக மாற்றியமைத்திருக்கிறது. அரசாணை வெளியானதும் இந்த தொகை வழங்கப்படும் என தெரிகிறது.

வேறு என்ன உதவிகள் வழங்கப்படுகின்றன?

அரசு வழங்கும் உதவித் தொகையுடன் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு சேலைகளும், சத்துணவு மையத்தில் உணவு சாப்பிடுபவர்களுக்கு மாதம்தோறும் 2 கிலோ இலவச அரிசியும், பங்கெடுக்காதவர்களுக்கு மாதம்தோறும் 4 கிலோ இலவச அரிசியும் வழங்கப்படுகிறது.

இந்த உதவி பெறுவதற்கான தகுதிகள் எவை?

குறைந்தபட்ச வயது அல்லது அதிகபட்ச வயது என்று எதுவுமில்லை. அதேபோல் ஜாதி, மதம் என்பது இத்திட்டத்தில் தடையல்ல. ஆனால், வேறு வருமான ஆதாரம் இருக்கக் கூடாது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றுபவராக இருத்தல் கூடாது. குறிப்பாக மறுமணம் செய்திருக்கக் கூடாது.

எந்த வயது வரை இந்த உதவி கிடைக்கிறது?

உதவி பெறும் பெண்ணுக்கு ஆண் மகன் இருந்தால், அவருக்கு 18 வயது பூர்த்தியாகும் வரை இந்த உதவி வழங்கப்படும். ஆண் மகன் இல்லாத பட்சத்தில் வாழ்நாள் முழுவதும் இந்த உதவி பெறலாம்.

இதற்கான விண்ணப்பம் எங்கு வாங்க வேண்டும்?

தாலுகா அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இதனை தேவையான சான்றிதழ்களுடன் பூர்த்திசெய்து அனுப்பினால் உதவித் தொகை பெற முடியும்.


இணைக்க வேண்டிய ஆவணங்கள் எவை?

இருப்பிட சான்று, வயது சான்று, வருமானம் இல்லை என்பதற்கான சான்று மற்றும் கணவரது இறப்பு சான்று ஆகியவை இணைக்கப்பட வேண்டும். கணவரை இழந்ததற்கான சான்றினை அவர்கள் வசிக்கும் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர், நகராட்சி, ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், பதிவு பெற்ற அதிகாரிகள் போன்ற வர்களிடம் வாங்கலாம்.

எப்பொழுது உதவித் தொகை கிடைக்கும்?

விண்ணப்பத்துடன் கொடுக்க வேண்டிய அத்தனை சான்றிதழ்களையும் சேர்த்து வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் அல்லது நலிந்தோர் நலத்திட்ட அலுவலர் போன்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அலுவலகத்தில் விண்ணப்பம் முறைப்படி ஆய்வு செய்த பின்னர், அரசு ஒதுக்கீடு தொகை கொடுத்ததும் உதவித் தொகை தபால் அலுவலகம் மூலம் வீட்டுக்கே வந்து சேர்ந்துவிடும்.

No comments:

Post a Comment