Monday, July 18, 2011

குறைந்து வரும் சுக பிரசவங்களும் பெருகி வரும் சிசேரியன்களும்...!


ஒரு நாட்டில் 15 சதவீதத்துக்கு மேல் சிசேரியன் பிரசவங்கள் இருந்தால், அந்த நாட்டில் பெண்கள் ஆரோக்கியமாக இல்லை என அர்த்தம்' என, உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. சென்னையில், சிசேரியன் சதவீதம் 50க்கும் மேல் உள்ளது.சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது உண்மைதான் என, டாக்டர்களே ஒப்புக் கொள்கின்றனர்.



 வாழ்க்கை முறை மாற்றம், அதிக எடை, குறைந்த உடல் உழைப்பு போன்றவை சிசேரியன் பிரசவங்கள் அதிகரிக்கக் காரணங்கள் என்றாலும், சிசேரியன் பிரசவங்களை தனியார் மருத்துவமனைகள் ஊக்குவிக்க, பணமும் ஒரு காரணம் என்ற வலுவான குற்றச்சாட்டும் உள்ளது. கரு உருவாகி, தங்களிடம்,"செக்-அப்'புக்கு வரும்போதே அந்தப் பெண்ணின் மனநிலையை, சிசேரியன் பிரசவத்துக்கு ஏற்ப, தனியார் நிறுவனங்கள் தயார் செய்து விடுகின்றன என குற்றம் சாட்டப்படுகிறது.

கர்ப்பிணியின் உடல் அமைப்பு, சாதாரண பிரசவத்துக்கு ஏற்றதாக இருந்தால், சிசேரியனுக்கு அவர்களைக் கட்டாயப்படுத்துவது இல்லை. இரண்டு தலைமுறைக்கு முன், சர்வ சாதாரணமாக ஏழு, எட்டு முறை கர்ப்பம் தரிப்பார்கள். இதில் ஒன்றிரண்டு குழந்தைகள் இறந்தே பிறக்கும். ஒன்றிரண்டு மிஞ்சும். ஆனால், இப்போது ஒன்று, தப்பினால் இரண்டு என்றாகிவிட்ட நிலையில் யாரும், "ரிஸ்க்' எடுக்கத் தயாராக இல்லை.

சாதாரண பிரசவத்தை விட சிசேரியன் பாதுகாப்பானது என, பலர் நம்புகின்றனர்,'' என மக்களின் மன நிலை மாற்றத்தை சுட்டிக் காட்டினார்.""சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள, கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் கூட சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2006ம் ஆண்டு, 20 சதவீதமாக இருந்த சிசேரியன் பிரசவங்கள் 2011ம் ஆண்டு 50 சதவீதமாக அதிகரித்துவிட்டது,'' என, தனியார் மருத்துவமனையில் பணி புரியும் டாக்டர்.தியாகராஜன் கூறினார்.எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் மீனலோசனி, ""தலைமை அரசு மருத்துவமனைகளில் சிசேரியன் அதிகரித்துள்ளதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முடியாதவை, இங்கு அனுப்பப்படுவதே காரணம்.

ஆனால், அங்கு சாதாரண பிரசவங்கள் தான் அதிகம்,'' என விளக்கம் அளித்தார். இதை கிராமப்புற செவிலியர் கற்பகமும் உறுதி செய்தார், ""ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதத்துக்கு 50 டெலிவரிகள் என்றால் 40 சாதாரண பிரசவம் தான்.''ஏழை மற்றும் அடித்தட்டு பிரிவைச் சேர்ந்த பெண்களில் பெரும்பாலோர், அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்துக்கொள்வதால், அவர்களுக்கு சாதாரண பிரசவம் தான் நடக்கிறது. ஆனால் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் நடுத்தர, மேல்தட்டு வர்க்கத்தினர் டாக்டர்களின் அறிவுருத்தலின் பேரிலோ, பயம் காரணமாகவோ, சிசேரியனை எளிதில் தேர்வு செய்கின்றனர்.

மாறி வரும் வாழ்க்கை முறை சிசேரியன் பிரசவத்திற்கு ஒரு காரணம் என்று, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மகப்பேறு மற்றும் சிறுநீரகத் துறை டாக்டர் ஸ்ரீ கலா, ""வாழ்க்கை வசதிகள் பெருக, பெருக இயல்பான பிரசவங்கள் குறைந்து, சிசேரியன் அதிகரித்து வருகிறது. இப்போது உடல் உழைப்பு குறைந்துவிட்டது. கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோயாலும் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இவை சில நேரங்களில் தாய்-சேய் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும். இதுவே சிசேரியன் பிரசவங்கள் அதிகரிக்க காரணங்கள்,'' என்றார்.

வாழ்முறை ஒரு பக்கம் இருக்க, தனியார் மருத்துவமனைகளில் பணமும் முக்கிய காரணமாக உள்ளது, ""சிசேரியன் அதிகரிக்க, பணம் ஒரு முக்கிய காரணம் என்பது நடுநிலை மருத்துவர்களின் கருத்து. இப்போது மருத்துவமும் வர்த்தகமாகப் பார்க்கப்படுவதால், தாங்கள் செய்துள்ள முதலீட்டுக்கு ஏற்ப பணம் ஈட்ட வேண்டிய கட்டாயம், தனியார் மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது. பணத்துக்காக சிசேரியன் என்ற குற்றச்சாட்டை உடைப்பதற்காக, இரண்டுக்கும் ஒரே விதமான கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம்,'' என டாக்டரர் தியாகராஜன் கூறினார்.

தாய்- சேய் ஆரோக்கியமாக இருக்கும்பட்சத்தில், நார்மல் டெலிவரியே தாயுக்கும்,சேய்க்கும் நல்லது என்பதே அனைத்து டாக்டர்களின் ஒருமித்த கருத்து. எனவே, அவசியம் ஏற்பட்டால் மட்டுமே சிசேரியன் என்று டாக்டர்கள் உறுதி கொள்ள வேண்டும். நார்மல் டெலிவரியை ஊக்கப்படுத்தும் வகையில், பெண்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நல்ல நாளில் பிறக்க...நல்ல நாளில், நல்ல நேரத்தில், நல்ல நட்சத்திரத்தில் குழந்தை பெற்றெடுப்பதற்காக சிலர் அறுவை சிகிச்சை செய்கின்றனர், என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதற்கு பதிலளித்த டாக்டர் ஜெயஸ்ரீ, "எங்காவது ஒன்றிரண்டு நடக்கலாம். பெரும்பாலான மருத்துவர்கள் இதற்கு உடன்படுவதில்லை' என்றார்

thanks: payanulla thakvalkal

No comments:

Post a Comment