Saturday, July 2, 2011

குழந்தைகள் மனநலம் பாதிக்கப்படுவது யாரால்....?

சமீப காலமாக குழந்தைகள் மனநலம் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் பெற்றோரும், பள்ளி ஆசிரியர்களும் தான். பத்து வயது சிறுவனான மனோஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பெற்றோருக்கு ஒரே மகன். பட்டதாரிப் பெற்றோர், எல்லா விதத்திலும் மனோஜுக்கு நல்வழிகாட்டி. படுசுட்டி, புத்திசாலித்தனம் நிறைந்த மனோஜ், பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறான். அனைத்துத் தேர்வுகளிலும் முதல் ரேங்க். கையெழுத்து கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்.இரண்டு வாரங்களுக்கு முன், வயிற்று வலி என அவஸ்தைப்பட்டவன், உள்ளூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு, பிரச்னை ஏதுமில்லை என்று, வலி நிவாரணம் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டான். ஒரு சில நாட்களில், "நெஞ்சில் அடைப்பு உள்ளது. சளி தொந்தரவு, கை வலிக்கிறது. எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ' என, அவன் பயந்து அழவும், அவன் பெரியம்மா (கடலூரில் உள்ளவர்), தன் தங்கையைக் குழந்தையுடன் வரவழைத்து, "காஸ்ட்ரோ என்டாலஜிஸ்ட்'டிடம் காட்டி உள்ளார். 
 
அனைத்து உடல் பரிசோதனை முடிவுகளையும் பார்த்த அவர், அவனையும் பரிசோதித்து விட்டு, "உடலில் ஏதும் பிரச்னையில்லை' என்று, குழந்தைகள் நல அறுவைச் சிகிச்சை நிபுணரிடம், சிறப்புப் பரிசோதனை செய்து கொள்ள அனுப்பினார். பரிசோதனையில் ஏதும் குறையில்லை என்றதும், என்னிடம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.

அவனிடம் தனியாக விசாரித்த போது அறிந்த உண்மை... பள்ளியில்  கல்வி முறையில், "அசைன்மென்ட்' கொடுப்பவர்கள், கேள்வி - பதிலை எழுதி வரச் சொல்கின்றனர். இவனுக்கு இன்டர்நெட் மூலம் தகவல் சேகரித்து, முதலில் படித்துத் தன் மனதில் பதிய வைத்து, அதை அவன் அம்மாவுக்குப் பாடமாக எடுக்கிறான். இதனால், கற்றது அவனுக்கு நன்கு மனதில் பதிகிறது. அதன் பின்னரே, அவன் கேள்விக்கான பதிலை, தன் சொந்த நடையில் எழுதுகிறான். 
 
இதனால், அவனுக்கு ஒரே நாளில் எழுதி முடிக்க இயலவில்லை. ஆனால், ஆசிரியையோ, "அப்படியே கேள்வி-பதிலைப் பார்த்து எழுதி வா' என்று கட்டாயப்படுத்துகிறார். இவனோ, "நான் புரிந்து கொண்டு எழுதுவது தான் சிறந்தது; பார்த்துப் பார்த்து எழுதுவதில் என்ன பிரயோஜனம்?' என்று கேட்கிறான் அவனுடைய கேள்வி ஞானமும், அறிவுக் கூர்மையும், சுறுசுறுப்பும் யாரையும் மயக்கும்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, அவன் வீட்டில் விஷேஷம் என்பதால், வீட்டுப்பாடம் செய்யவில்லை. மறுநாள் வகுப்புக்கு சாக்லேட்டுடன் புத்தாடை அணிந்து சென்றவனை, "என்ன காரணத்தால் வீட்டுப்பாடம் செய்யவில்லை' என்று கூட கேட்காமல், அவனை அடித்த ஆசிரியை, வகுப்புக்கு வெளியில் முட்டிபோட வைத்து தண்டனை அளித்திருக்கிறார். முதல் ரேங்க் எடுக்கும் தனக்கு நேர்ந்த அவமானத்தை தாங்கிக் கொள்ள இயலாமல், மனதில் மறுகியதால் தான் அவன் உடலுக்குள் இத்தனை பிரச்னையும். உரிய ஆலோசனையும், மனப்பயிற்சியும் கொடுத்ததில், மறுநாளே சகஜமாகிவிட்டான். அவன் அம்மாவும், பள்ளி முதல்வரிடம் நடந்ததைக் கூறி, இனி இத்தவறு எந்த மாணவனுக்கும் நடக்காமல் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார். "முதல்வர், மாணவர்களின் நண்பன்' என்று மனோஜின் அம்மா பாராட்டுகிறார்.

ஆனால், குழந்தைகளிடம் நண்பனாக நடந்து கொள்ள வேண்டியது ஆசிரியர்களும் தான் என்பதை, இவர்கள் உணரப் போவது எப்போது? 10ம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவியாக வந்த சாந்திக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பிளஸ் 2 படிப்புக்காக சிறப்புப் பயிற்சியளிக்கும், வெளியூரில் பிரபலமானப் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆசை. காரணம், மேற்கொண்டு மருத்துவம் பயில வேண்டும் என்பது. ஆரம்பத்தில் சந்தோஷமாக இருந்தவள், இரண்டு வாரங்களாக வாந்தி, வயிற்றுப் போக்கு, மயக்கம் என்று தொடர் உடல் உபாதைக்கு ஆளாகி, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். 
 
மருத்துவப் பரிசோதனைகள் ஒரு பிரச்னையுமில்லை என்றதும், என்னிடம் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டாள். தனிப்பட்ட முறையில் அவளிடம் விசாரித்ததில், ஹாஸ்டலில் சக மாணவியர், அவள் உடல் தோற்றத்தையும், கிராமத்திலிருந்து சென்ற அவளின் பேச்சு முறையையும் கிண்டல் செய்ததைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை என்பது தெரிந்தது.

அவள் தந்தையோ, வீட்டுக்கோ அல்லது பிள்ளைகள் படிப்புக்கோ செலவு செய்யும் போதெல்லாம், "ஐயோ! இவ்வளவு பணம் செலவாகிறதே...' என்று புலம்பிய படியே செலவு செய்வார். இதனால், "தந்தைக்குத் தான் அனாவசியமாக செலவு வைக்கிறோமோ; நம்மால் எதிர்பார்த்தபடி நன்கு படித்து, சிறந்த மதிப்பெண்கள் எடுக்க முடியாதோ; இப்படி உடல் நலமின்றி போவதால் தந்தைக்கு மேலும் செலவு வைக்கிறோமோ?' என, பல்வேறு குற்ற உணர்வுகளால் மனம் வருந்திய அவள், ஊருக்கு வந்ததும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளாள்.

அதீத மன அழுத்தம் காரணமாக, அவள் இயல்பு நிலை பாதிப்படைந்து இருந்ததால், மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, மருந்து உட்கொள்ள வேண்டும் என்று, அவள் பெற்றோரிடம் கூறிய போது, "ஐயோ டாக்டர்... வேண்டாம், வேண்டாம். என் அப்பாவுக்கு செலவு வைக்காதீர்கள். நான் இருப்பதே வேஸ்ட். நான் சாகிறேன். இல்லையென்றால், நீங்களே என்னை மாற்றிக் கொள்ள அறிவுரை கூறுங்கள்' என்று, பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். 
 
அவளை ஆசுவாசப்படுத்தி, இம்மனநிலையில் கவுன்சிலிங் செய்ய இயலாது என்பதைப் புரிய வைத்து, மனநல மருத்துவரிடம் அனுப்பி வைத்தேன். குழந்தைகளுக்கு செலவிடுவதையே சுமையாகக் கருதலாமா? உண்மையில் குழந்தைகள் வரவால் தானே, தம்பதியருக்குள் நெருக்கமும், குடும்பத்தில் பிணைப்பும், வாழ்வில் ஓர் அர்த்தமும், லட்சியமும் கிடைக்கிறது? குழந்தை இல்லாமல் ஏங்கும் பெற்றோரிடம் கேட்டுப் பார்த்தால் தானே, பிள்ளைகள் பற்றிய பெருமை புரியும்.

மேற்கூறியவை எல்லாம், தற்போது அதிக அளவு நடந்து வரும் உண்மை நிகழ்வுகள். கல்வி வாழ்க்கைக்கு ஓர் ஆதாரம். மறுக்கவில்லை. ஆனால், கற்றுத்தரப்படும் கல்வி, குதூகலமாக, ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைவது முழுக்க, முழுக்க ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது. பெற்றோர் அல்லது ஆசிரியர்களை நினைத்தாலே பயப்படும் வண்ணம், குழந்தைகள் நடத்தப்பட்டால், அது அவர்களின் முன்னேற்றத்திற்கு எந்த விதத்தில் உதவும்? மதிப்பெண் குறைந்தாலோ அல்லது பாடங்களை எழுதி வரவில்லை என்றாலோ, அதற்கான காரணம் என்ன என்று தகுந்த முறையில் கேட்டால் தானே, அக்குழந்தை மனம் திறந்து பேச முடியும்? எத்தனையோ குழந்தைகள், குடிகாரத் தந்தைகளால் வீட்டில் தினம், தினம் நடக்கும் சண்டையால், மனதளவில் பாதிக்கப்பட்டு, அடிக்கடி நோய்வாய்ப் படுகின்றனர்.

பிள்ளைகளிடம் பெற்றோர், நட்புணர்வுடன் பழக வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு மாதாமாதம் பயிற்சி அளிப்பது போல், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் குழந்தைகளை நல்வழியில் கையாள்வது பற்றிய பயிலரங்கங்கள் நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால், மனநலம் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை, எதிர்காலத்தில் பல மடங்காகும் என்பது உறுதி. 
 
பெற்றோரே, ஆசிரியர்களே... "கனிவு' எனும் பாசக் கயிறால் குழந்தைகளைக் கட்டிப் போடுங்கள். கண்டிப்பும், தண்டிப்பும் அத்துமீறும் ஒரு சிலரிடம் மட்டுமே, அளவோடு பயன்படுத்த வேண்டும். பிள்ளைகளை மதிப்போடும், மரியாதையோடும் நடத்த வேண்டியது பெற்றோரின் இயல்பான கடமை. இதிலிருந்து தவறும் பெற்றோர், இறுதி காலத்தை முதியோர் இல்லங்களில் தான் கழிக்க வேண்டி வரும் என்பது பட்டவர்த்தமான உண்மை. வன்முறையைத் தவிர்ப்போம்; அன்பை வளர்ப்போம்.  
நன்றி: பயனுள்ள தகவல்கள்

No comments:

Post a Comment