Saturday, July 2, 2011

பிரிக்க முடியாதது....... மழையும் கொசுவும்...!


மழைக்காலம் பிறந்தாலே, கொசுவுக்குக் கொண்டாட்டம் தான். மனிதர்களின் ரத்த வேட்டையைத் துவங்கி விடும். கொசுக்களில் பல வகை உண்டு; பகல் நேரங்களில் கடிப்பவை, இரவு நேரங்களில் கடிப்பவை என! எவ்வகை கொசுவாயினும், அவற்றில் பெண் கொசுக்கள் முட்டையிட, ரத்தம் தேவை. தொடர்ந்து ஒவ்வொரு மனிதராக அது கடிக்கும் போது, ரத்தத்தின் மூலம் பரவும் மலேரியா, யானைக்கால் நோய் (பைலேரியா), மூளைக்காய்ச்சல் (என்செபாலிடிஸ்), டெங்கூ, சிக்குன்குனியா போன்ற நோய்கள் உருவாகின்றன.

மலேரியா தொற்றுக் கிருமிகளை ஏந்தி வரும் ஒரு கொசு, நம்மைக் கடித்த 10 முதல் 14 நாட்களுக்குள், மலேரியா உருவாகும். காய்ச்சல், தலைவலி, உடல் வலி, பேதி ஆகியவை ஏற்படும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய்ச்சல் ஏற்படும். குளிரும்; திடீரென வியர்க்கும். உடலில், ரத்த சிவப்பணுக்கள் அளவு குறையும். இதனால், ரத்த சோகை உருவாகி, சோர்வு, சோம்பல் ஏற்படும். குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் இந்நோய் வந்தால் ஆபத்து.

ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் மலேரியா காய்ச்சலை கண்டறியலாம். நோய் உறுதி செய்யப்பட்டால், முழு சிகிச்சை எடுக்க வேண்டியது மிக அவசியம். இந்த நோய்க்கு காரணமான ஒட்டுண்ணிகள், நம் கல்லீரலில் அமைதியாக வாழ்ந்தபடி இருக்கும். முழுமையான சிகிச்சை எடுக்காவிடில், மீண்டும் அதிதீவிரமாக தாக்கத் துவங்கி விடும். காய்ச்சல் குறைந்தவுடன், மருந்து மாத்திரை சாப்பிடுவதை பலரும் நிறுத்தி விடுவது துரதிருஷ்டவசமானது.

கடும் காய்ச்சல் ஏற்பட்டால், முறையான மருத்துவரிடம் காண்பிக்கும் பழக்கமும் மக்களிடையே இல்லை. முறையாக மருத்துவம் படிக்காத டாக்டர்கள், பல மாத்திரைகளைக் கலந்து ஒரு பேப்பர் பாக்கெட்டில் போட்டு கொடுத்து விடுகின்றனர். இவை ஆன்டிபயாடிக், ஜுர மத்திரை, ஒரு ஸ்டிராய்டு, ஒரு மலேரியா தடுப்பு மாத்திரை என இருக்கும்.

இது போன்ற, குத்து மதிப்பான சிகிச்சை, சில நேரங்களில் வெற்றி பெறலாம்; பாக்டீரியாவுக்கு ஆன்டிபயாடிக்கும், மலேரியாவுக்கு அதற்கென மாத்திரையும் கொடுக்கப்படுவதால். ஆனால், இறுதியில் இந்த இரண்டு நோய்களுமே, மீண்டும் திரும்பத் தாக்கத் துவங்கிவிடும். இதன் விளைவு, உடலிலுள்ள ஒட்டுண்ணிகள், மலேரியா நோய்க்கான மருந்தையே எதிர்க்கத் துவங்கி விடும். இது ஆபத்து.

பைலேரியக் கொசுக்கள் கடித்தால் ரத்தத்தில் பைலேரியா கிருமி பரவும். யானைக்கால் நோய் ஏற்படும். கடும் காய்ச்சல், குளிர் ஏற்படும். நிணநீர் சுரப்பிகளை இந்த கிருமி அடைத்துக் கொள்ளும். இதனால், கை, கால்கள் வீங்கும். ஆண்களுக்கு விரைப்பை வீக்கமும் ஏற்படும். வீங்கிய இடங்களிலுள்ள தோல் தடிமனாகி விடும். இந்த தோல், மீண்டும் கிருமிகளால் பாதிக்கப்படும்.

ரத்தத்தில் பைலேரியா புழுக்கள் உள்ளனவா என்பதை, இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை வைத்துப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆரம்ப நிலை பாதிப்பை, சரி செய்து விடலாம். அல்பெண்டிசால் மாத்திரைகள் இரண்டு வாரத்திற்கும், ஐவெர்மெக்டின் மாத்திரை ஒன்றும், டைஈத்தைல் கார்பாமேசைன் மருந்து 12 முதல் 14 நாட்கள் வரையும் சாப்பிட்டால், குணமாகும். நோய் தீவிரமடைந்தால், குணப்படுத்துவது கடினம்; அறுவை சிகிச்சை மூலம் தான் வீக்கத்தை நீக்க முடியும்.

"ஏடிஸ் ஈஜிப்டி' கொசுக்களின் உடலில், புலிகள் போல வரி காணப்படும். பகல் நேரங்களில் மனிதர்களைக் கடிக்கும். இவற்றால், டெங்கூ, சிக்குன்குனியா நோய்கள் ஏற்படும். அதிக காய்ச்சல், உடல் முழுதும் தடிப்பு ஏற்படுதல், இணைப்புகளில் வலி, முதுகு வலி, தசை வலி ஏற்படும். இந்த நோய்கள் இப்போது வேகமாகப் பரவும் தன்மை கொண்டவை. இந்நோயால் தாக்கப்பட்டவர்களில், மருந்து உட்கொண்டு, காய்ச்சல் குறைந்தாலும், மூட்டுகள் வலி, முதுகு வலி ஆகியவை தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த நோய்களுக்கு மருந்துகளும் கிடையாது.

மூளைக்காய்ச்சலும், கொசுக்கள் மூலம் பரவுவதே. இதற்கும் சரியான மருந்து கிடையாது. ஆனால், உயிரைப் பறிக்கும் ஆபத்து, இந்த நோயில் உள்ளது. ஜப்பான் பி வகை மூளைக்காய்ச்சல் ஏற்படாமலிருக்க, தடுப்பு மருந்து உள்ளது. இத்தகைய நோய்கள் வந்த பிறகு சிகிச்சை எடுத்துக் கொள்வதை விட, வராமல் காப்பதே நல்லது.

* பாத்திரங்களில் நீரைத் தேக்கி வைக்கக் கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள், தொங்கிக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் ஷீட்களை அவ்வப்போது நிமிர்த்திக் கட்ட வேண்டும்.
* "ஏசி' மற்றும் கூலர்களிலுள்ள டிரேக்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அவற்றில் உப்பு தூவி வைத்தால், கொசுக்கள் அண்டாது.
* பூந்தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
* திறந்த கிணறுகள், தொட்டிகளில் கொசுக்கள் புகா வண்ணம் வலை அடிக்க வேண்டும்.
* அலங்கார மீன்களான, கபூசியா, போசிலி (கப்பி வகைகள்) ஆகியவை, கொசு முட்டைகளை உணவாக உட்கொள்ளும் பழக்கம் கொண்டவை. நகராட்சி அலுவலகங்கள், மலேரியா கட்டுப்பாட்டுத் திட்ட அலுவலர்கள் மற்றும் சில கடைகளில் இந்த மீன்கள் கிடைக்கும். இவற்றை பொதுக் கிணறுகள், நீர் நிலைகளில் வளர்த்தால், கொசு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

* வீட்டு ஜன்னல்கள், கதவுகளில், கொசு வலை அடித்து வைக்கலாம்.
* இரவு நேரங்களில் அறையில் கொசு வலை கட்டித் தூங்கினால், கொசுக் கடியிலிருந்து தப்பிக்கலாம்.
* முழுக்கை சட்டை, கால் மறையும் வகையில் பேன்ட் ஆகியவை அணிந்து படுத்தால் கொசு கடிக்காது.
* கொசு கடியிலிருந்து தப்பிக்க, உடலில் பூசும் வகையிலான களிம்புகள் உள்ளன. ஆனால், அவற்றை நேரடியாக உடலில் பூசுவதை விட, ஆடைகளில் பூசிக் கொள்வது நல்லது. குழந்தைகள், கர்ப்பிணிகள் இந்தக் களிம்புகளைப் பயன்படுத்தக் கூடாது.
* கொசு வத்திகள், சுருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இவை, மூச்சுக் குழலில் ஒவ்வாமை ஏற்படுத்தும். ஆஸ்துமா, அடுக்குத் தும்மல் ஆகியவற்றை உருவாக்கி விடும்.

* பூச்சிக்கொல்லி மருந்துக் கெல்லாம் இப்போதைய கொசுக்கள் கட்டுப்படுவதில்லை. இந்தப் பூச்சிக் கொல்லிகளை, "ஸ்பிரே' செய்தால், இந்த மருந்தை எதிர்க்கும் சக்தியைக் கொசுக்கள் பெற்று விடும்; மனிதர்களுக்கு, மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்படும்.
தகவல்: டாக்டர்-கீதா-மத்தாய்,-வேலூர்.

No comments:

Post a Comment