Friday, July 22, 2011

நாம தான் அட்ஜஸ் பண்ணி வாழ கத்துக்கணும்


மவுண்ட் ரோடு, டி.வி.எஸ்., ஸ்டாப்பில் தான், நான் ஏறினேன்.  11 எச் நிறைந்து வழிந்தது; முண்டியடித்து ஏறினேன். இடதுகால் ஸ்லிப் ஆகி விடப் போகிறதோ என்ற பயம் வேறு. பதிமூன்று வருடங்களுக்கு முன், விபத்தாகி, முட்டியில்  பந்து கிண்ண மூட்டில், பந்தில் மெல்லிய விரிசல் பரிசோதித்த டாக்டர், "ப்ளேட் எல்லாம் இந்த வயசில் வைக்க வேண்டாம்... மூணு மாசம், "பிசியோதெரபி'க்கு அப்புறம் பார்த்து நடங்க. ஹீல்ஸ் வெச்ச ஷூ போடாதீங்க... கால் ஸ்லிப் ஆச்சுன்னா, பந்து நகர்ந்து உட்காரும்... உயிர் போற மாதிரி அஞ்சு நிமிஷம் வலிக்கும்; அப்புறம் சரியாகும்...' என்றார்.

என்னதான் அவர் சொன்னபடி, ஜாக்கிரதையாய் நடந்தாலும், குறைந்தது ஐம்பது முறைக்கு மேல், ஸ்லிப் ஆகி, "ஐயோ' என்று காலைப் பிடித்துக் கொண்டு, தட்டுத்தடுமாறி கிடைக்கும் இடத்தில் உட்கார்ந்து, காலை நீட்டவும் முடியாமல், மடக்கவும் முடியாமல் அவஸ்தைப்பட்டு, பின் மெல்ல காலை நீட்டி உதறி எடுத்து, நடந்து சமாளித்து, வலி மறக்க, பத்து நிமிடமாவது ஆகிவிடும். கண்டக்டரிடம் பத்து ரூபாய் நீட்டினேன்.

""
ஒரு அஞ்சு ஐம்பது...''
""
அம்பது காசு இல்லை...''

""எல்லாரும் இப்படியே பத்து ரூபாய் நோட்டாய் நீட்டினால், நான் என்ன அடிச்சா தரமுடியும்... வெய்ட் பண்ணுங்க...'' நாலு ரூபாய்க்கான, இரண்டு இரண்டு ரூபாய் நாணயங்களையும், டிக்கெட்டையும் கிழித்து நீட்டினார்.

அடுத்த ஸ்டாப்பில் கூட்டம் ஏற, இன்னமும் நெருக்கியது.
""
முன்னால் போங்க சார்... எல்லாம் படிச்சவங்களா இருக்கீங்க, அறிவு வேண்டாம்?'' கண்டக்டர், ஏகவசனத்தில் திட்டினார். அவரே""யோவ்! உன்னைத்தான்ஐம்பது பைசா இறங்கறதுக்குள்ளே தரேன், நகருங்க... அங்கயே  கம்பியை பிடிச்சுட்டு அட்டை மாதிரி ஒட்டிட்டு நிக்கறீங்க...'' எனக்கும் வசவு. நகர்ந்தேன். நகர்ந்து, நகர்ந்து முன்னால் போய்விட்டேன். கூட்டம் முட்டி மோதியது. ஆணாவது, பெண்ணாவது... யார், யார் மீது மோதுகின்றனர், முட்டுகின்றனர், நசுக்குகின்றனர் என்று,

ஒன்றும் புரியாத கூட்டம். முகம், கழுத்து, தோள்பட்டை என  வேர்வை நாற்றத்தோடு.
இறங்க நாலு ஸ்டாப் இருக்கும் போதே, ஞாபகப் படுத்தினேன். தரேன் சார்! வந்தா தரமாட் டேனா... எட்டணாவுக்கு ஏன் இப்படி உயிரை வாங்கறீங்க?'' எனக்கு ஈகோ பற்றிக் கொண்டது. என் கைத் தொலைபேசியை எடுத்தேன். "மெட்ரோபாலிட்டன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன், கண்ட்ரோல் ரூம்...""சார் நான் 11எச், ஐயப்பன்தாங்கல் போற பஸ்சில் பயணம் பண்ணிட்டிருக்கேன்... பஸ்சில் ஏற்கனவே அளவுக்கு மீறி கூட்டம் இருக்கு... எனக்கு ஐம்பது காசு சில்லறை தரணும்... கேட்டா என்னென்னமோ பேசறாரு...'' டேஷ் போர்ட் நம்பரை சொல்லுங்க சார்...''

நான் நின்ற இடத்திலிருந்து டிரைவர் சீட் அருகில், திருக்குறள் பக்கத்தில் நம்பர் இருந்தது. கே என் 7024; சொன்னேன்.
""
கண்டக்டர்கிட்ட கொடுங்க...' பயணிகள் மூலம் கைப்போனை, கண்டக்டருக்கு பாஸ் செய்தேன். நின்ற இடத்திலிருந்தே கத்தினேன், ""டூட்டி ஆபிசர் லைன்ல இருக்காரு... பேசுப்பா.''
கண்டக்டர் கைகள் நடுங்க, கைப்போனை வாங்கினான்.
""
யெஸ் சார்... சரி சார்... ஓ.கே., சார்... காலையில டிப்போ ஜி.எம்.,க்கு ரிப்போர்ட் பண்றேன் சார்.''
 
ஐம்பது காசுடன் திரும்பி வந்தது போன். நான் இறங்க வேண்டிய இடம் வர, இறங்கி விட்டேன். இறங்கும் போது, ஓட்டுமொத்த பஸ்சும், என்னை ஏதோ கதாநாயகனைப் பார்ப்பது போல் பார்த்தது.
 
ஒரு வாரம் கடந்திருக்கும்.
பாண்டிபஜாரில் வங்கிக்குப் போய்விட்டு, ஓரமாய் நடந்து கொண்டிருந்தேன். நேரே பார்த்து கொண்டு நடந்ததில், கீழே ரோடை ஓட்டி இருந்த சிறுபள்ளம், கண்ணில் படவில்லை.
மடங்கி கீழே விழுந்தேன். "ஐயோ' என்று அலறல் போட்டேன். முட்டியில் வலி உயிர் போனது யாரோ என்னை தூக்கி, பிளாட்பாரத்தில் உட்கார வைத்து, காலை மெல்ல நீட்டி, நீவி விட்டனர். பந்து கிண்ண மூட்டு ப்ராப்ளமா சார்... எவனுக்கும் நடக்கவே தெரியாது... ப்ளேட்டும் வைக்கலை... இப்படி அடிக்கடி விழுந்துட்டு அவஸ்தை படுவான்...''

""
ரொம்ப நன்றிப்பா.''
நிமர்ந்து பார்த்தேன். 11 எச் கண்டக்டர்.
""
என்னப்பா நீயா... நல்லாயிருக்கியா?''
""
ஏதோ இருக்கேன் சார்... நான் டெம்பரரி ஸ்டாப்... நீங்க பண்ண புகார்ல, ஜி.எம்., ஒரு வாரம் சஸ்பெண்ட் பண்ணிட்டாரு... ரெண்டு நாள் டூரிஸ்ட் கார் டூட்டி கிடைச்சது. என்ன சார் பண்றது, காலையில ஆறு மணிக்கு முதல் சிங்கிள் எடுக்க, அஞ்சு மணிக்கு கிளம்பி வரணும். ஒரு, "ட்ரிப்'புக்கு ஆயிரத்து எழுநூறு ரூபா கட்டணும், இரண்டாயித்து ஐந்நூறு தாண்டினா, டிப்போ மானேஜர் லேசா இளிப்பாரு.
 

 இன்சன்டிவ், டெம்ரரி ஸ்டாபுங்க மேல எப்ப குறை, புகார் வரும்ன்னு, கழுகு மாதிரி காத்திருப்பாங்க... அதை விடுங்க சார்... நாளைக்கு டூட்டி... இங்க பிரெண்ட்டை பார்க்க வந்தேன்... பார்த்து போங்க சார்... சத்தியமா சார்.  உங்க போன், கையில வர்றப்ப தான், ஒரு புண்ணியவான் நாலு ஐம்பது காசு கொடுத்து, டிக்கெட் வாங்கினார்; கொடுத்துட்டேன்.
""
நாங்க என்ன  சார் பண்றது. ஒரே டென்ஷன்  ஜாப்... இப்ப பாருங்க இந்த பள்ளத்துல வழுக்கி விழுந்திருக்கீங்க... ரோடு கான்ட்ராக்டர், பல கோடி ரூபாய் பணத்தை வாங்கிட்டு ரோடை போட்டிருக்கான்... நீங்க இல்ல, உங்களை மாதிரி எத்தனை பேரு இங்க விழுந்திருப்பாங்க...
 

 இதுக்கு நீங்க போன் பண்ணி, ஒவ்வொரு இடமாய் தகவல் போய், கான்ட்ராக்டர் உங்க வீட்டுக்கு, ஆட்டோ அனுப்புவான்...  பணம் சார் பணம்... நான் இந்த வேலைக்கு, பெண்டாட்டி நகையை வித்து, ஒன்றரை லட்ச ரூபாய் கொடுத்து வந்தேன்... அதை விடுங்க, சொந்த கதை. பார்த்து போங்க சார்.''
கைப்பிடித்து தூக்கி விட்டான்.
""
பார்த்து போங்க சார்... எல்லாமே ஓட்டைதான்... நாம தான் அட்ஜஸ் பண்ணி வாழ கத்துக்கணும்...''
 
நான் மெல்ல நடந்தேன்.
நான் ஒழுங்காக போகிறேனா என்று, அங்கேயே நின்றபடி இன்னமும் பார்த்து கொண்டிருந்தான். எங்குதான் ஓட்டை இல்லை. ஒவ்வொருவனாய் கண்டுபிடித்து, சண்டைப் போட்டுக் கொண்டிருந்தால், நம்மை அல்லவா சல்லடை ஆக்கி விடுவர். நானும் உள்ளுக்குள்ளேயே, எல்லாவற்றையும் பூட்டி வைத்து, புழுங்கிச் சாகும், புழுவாகி போனது போல் உணர்ந்தேன்.

No comments:

Post a Comment