Thursday, July 28, 2011

செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி



தொழில்நுட்ப வளர்ச்சியால் செல்போன்கள் பெரியவர்கள் முதல் சின்னஞ் சிறுசுகள் உள்பட அனைவரிடத்திலும் அங்கம் வகிக்கிறது. இன்னும் சில ஆண்டுகள் சென்றால் செல்போன் இல்லாத நபர்களே இருக்க முடியாது? என்னும் நிலை வரப் போகிறது. எனவே செல்போனை எளிதாக பயன்படுத்துவதற்கு வேண்டிய கருவிகளை விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 


சார்ஜ் செய்ய பயன் படுத்தும் கருவி இல்லாமல் புதிய வடிவில் செல்போன், லேப்டாப் கம்ப்யூட்டர்களை சார்ஜ் செய்து கொள்ள தொழில்நுட்பம் மிக்க தட்டு வடிவ கருவியை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அந்த கருவியின் சிறப்புகளை இந்த வாரம் அறிவியல் அதிசயம் பகுதியில் விரிவாக காணலாம்.



ஒரு எலக்ட்ரானிக் கருவிக்கு சார்ஜ் செய்ய வேண்டும் என்றாலே அதற்காக பிளக் பாயிண்டை தேடி அலைவோம். சில சமயம் சிக்கிக் கிடக்கும் கேபிள்களுக்கு நடுவே சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். செல் போனையோ அல்லது லேப்டாப் கம்பயூட்டருக்கோ மின்சாரம் சார்ஜ் செய்யவேண்டுமென்றால் அது சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும் பிளக் மற்றும் சுவிட்ச்சிற்கு அருகில் அமர்ந்து கொண்டு சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் அதற்கெல்லாம் முடிவு கட்டிவிட்டார்கள்.



இந்த தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களில் ஒருவரும் அமெரிக்காவின் மஸ்ஸாச்சுசட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியருமான மெரின் சோல்ஜாசிக் கூறுகையில், "கடந்த சில வருடங்களாக நாங்கள் லேப்டாப், செல்போன், எம்.பி.- 3 கருவிகள் என்று பலவகை சாதனங்களை உபயோகித்து வருகிறோம். இம்மாதிரியான கருவிகளுக்கு மின்சாரம் சார்ஜ் செய்வதற்கு இந்த நவீன யுக்தி ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வெகு நாட்களுக்கு முன்னதாகவே எங்கள் மனதில் தோன்றியது. மின்சாரம் அருகில் இல்லாத இடங்களில் சிக்கி கொண்டால் செல்போன் மற்றும் லேப்டாப் கம்ப்யீட்டரை ரீ-சார்ஜ் செய்ய நாங்கள் அவஸ்தைப் படுகிறோம். இந்த அவஸ்தை எல்லோருக்கும் பொதுவானதுதான். இதனால் இந்த ஆய்வு எங்களுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் பயனுள்ள விஷயமாகும்.



கேபிள் இல்லாத  (Wireless Power supply or wireless re & charge) மின்னேற்றியை உருவாக்குவதற்கு பலவித தொழில்நுட்ப யுக்திகள் பயன்படுத்துவது பற்றி ஆராய்ந்து வரப்படுகின்றன. மின்காந்த அலைகள், ரேடியோ அலைகள், அகச்சிவப்பு மற்றும் எக்ஸ்ரே கதிர்களை உள்ளடக்கிய மின்காந்த கதிர்வீச்சுகளை பயன்படுத்துவதால் மின்சாரம் எல்லா திசைகளிலும் பரவலாக சிதறடிக்கப்படுகிறது. இதனால் மின்சாரம் வீணடிக்கப்படுகிறது. ஆகையால் இந்த முறை அவ்வளவு இதற்கு பொருத்தமானதாக இல்லை. இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ரேடியோ அலை  (Non & radiative) இல்லாத முறையை பயன்படுத்த திட்டமிட்டோம்.

இப்புதிய முறையில் மின்சாரம் சார்ஜ் செய்யப்படும்பொழுது மின்சாரம் வீணடிக்கப்படாமல் சம்பந்தப்பட்ட கருவியை முழுவதுமாக சென்றடைகிறது. ஒரு சாதாரண காப்பர் ஆண்டெனா மூலம் சுலபமாக ஒரு லேப்டாப் கம்பயூட்டருக்கு கேபிள் இல்லாமல் மின்சாரம் ஏற்றலாம். அப்படி மின்சாரம் சம்பந்தப்பட்ட கருவிக்கு மின்சாரம் ஏற்றப்படவில்லை என்றால் அப்படியே மற்ற இடங்களில் சிதறாமல் திரும்ப அழைத்துக் கொள்ளவும் முடியும்,''

இக் குழு இப்பொழுது உருவாக்கியிருக்கும் இம்முறையில் மூன்று முதல் ஐந்து மீட்டர் வரை கேபிள் இல்லாமல் மின்சாரத்தை ஏற்றலாம். வேறு சில ஆராய்ச்சிக் குழுவினரால் லேசர் கதிர் மூலம் கேபிள் இல்லாமல் மின்னேற்றும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதில் சில இடர்களும், தடைகளும் உள்ளன.


இங்கிலாந்தில் உள்ள ஸ்ப்ளாஷ்பவர் (Splashpower) என்ற நிறுவனம் கேபிள் இல்லாமல் சார்ஜ் செய்யும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. லேப்டாப் அல்லது எந்த எலக்ட்ரானிக் கருவியையோ சார்ஜ் செய்யவேண்டுமென்றால் அதற்கான தட்டில் வைத்தால் போதுமானது. அது அப்படியே ரீசார்ஜ் செய்து கொள்ளும். இத்திட்டத்தின் விஞ்ஞானியும் பேராசிரியருமான சோல்ஜாசிக் அமெரிக்க பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறை மாநாட்டில் இம் முறையை அறிமுகப்படுத்தி உள்ளார்.

கேபிள் இல்லாமல் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம்:-

1. மின்சாரத்தை வினியோகிக்கும் ஆண்டெனா காப்பரால் தயார் செய்யப்பட்டுள்ளது.

2. ஆண்டெனா மின்காந்த அலையை வெளிவிடுகிறது.

3. வெளிவிடப்பட்ட மின்சாரம் 5 மீட்டர் வரை செல்லும் திறன் கொண்டது.

4. வெளிவிடப்பட்ட மின்சாரத்தை சம்பந்தப்பட்டக் கருவி அதாவது லேப்டாப் அல்லது செல்போன் போன்ற எலக்ட்ரானிக் கருவி இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்றிக் கொள்கிறது.

5. மின்சாரம் ஏற்றப்படவில்லை என்றால் அப்படியே மின்சாரம் திரும்பப் பெறப்பட்டு சேமிக்கப்படுகிறது.

இவ்வாறு மின்னேற்றம் ஏற்படும் பொழுது மனிதர்களுக்கோ அல்லது பிற கருவிகளுக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இச்சாதனை இப்பொழுது ஒரு அறைக்குள் நடைபெற்றாலும் எதிர் காலத்தில் கேபிள் இல்லாத மின்சாரம் வீடுகளுக்கு ஆண்டெனா மூலம் கிடைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இதனால் ஏகப்பட்ட இடர்கள் தவிர்க்கப்படுகிறது. உதாரணமாக இயற்கை சீற்றங்களால் மரம் கேபிள் அறுந்தோ அல்லது அல்லது மின்கம்பங்கள் சாய்ந்து ஊரே இருளில் மூழ்கும் அபாயம் தவிர்க்கப் படும். இந்த கருவி எதிர்காலத்தில் நல்ல பலனை தரும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
நன்றி: எம்.ஜே.எம் இக்பால்
அற்வியல் அதிசயம்

No comments:

Post a Comment