தங்களிடம் வந்து அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளுமாறு டாக்டர்கள் விளம்பரங்களைச் செய்யக் கூடாது என்று தேசிய நுகர்வோர் குறை தீர்வு ஆணையம் கூறியுள்ளது. இதுபோன்ற விளம்பரங்களை டாக்டர்கள் வெளியிடுவது நியாயமற்ற வணிக நடவடிக்கை என்றும் அந்த ஆணையம் கூறியுள்ளது.
3 நாளில் முடி வளரவைக்கும் அற்புத அறுவைச் சிகிச்சை, முடங்கிக் கிடப்பவரையும் ஒலிம்பிக்கில் ஓடவைக்கும் சிகிச்சை போன்ற நம்பமுடியாத வாக்குறுதிகள் அடங்கிய சில விளம்பரங்களை டாக்டர்கள் என்று பெயரில் சிலர் வெளியிட்டிருப்பார்கள்.இவற்றில் பல போலியானவை. ஆனால் இவற்றை நம்பி ஏமாற்றமடைபவர்களும், உடல் நிலை பாதிப்புக்கு உள்ளானவர்களும் மிகஅதிகம்.
இதுபோன்ற வழக்கு ஒன்று தேசிய நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்துக்கு வந்தது. அதில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுரேந்திரகுமார் தியாகி என்பவர் டாக்டர் ஒருவரின் தவறான அறுவை சிகிச்சையால் தனது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார்.
மீரட்டைச் சேர்ந்த டாக்டர் எஸ்.கே. சர்மா என்பவர் தன்னை அறுவைச் சிகிச்சை செய்வதில் முதுநிலைப் பட்டம் பெற்றவர் என்று விளம்பரம் செய்திருந்தார். அதனை நம்பி அவரிடம் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டேன். இதில் எனது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு விட்டன என்று அவர் கூறியிருந்தார்.
இதனை விசாரித்த தேசிய நுகர்வோர் குறை தீர்வு ஆணைய உறுப்பினர்கள் ஆர்.சி. ஜெயின், எஸ். சந்திரா ஆகியோர் கூறியது:
மருத்துவம் என்பது மிகவும் புனிதமான சேவையைச் செய்யும் தொழில். அதில் போலியாக விளம்பரங்களை கொடுத்து சிகிச்சைக்கு ருபவர்களை ஏமாற்றுவதை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
டாக்டர்கள் விளம்பரங்களை வெளியிடுவது ஒரு நியாயமற்ற வணிக நடவடிக்கை. இதுபோன்ற செயல்களில் டாக்டர்கள் ஈடுபடக் கூடாது.
பலர் டாக்டருக்கு படிக்காமலேயே டாக்டர்கள் என்று கூறிக்கொண்டு மருத்துவம் செய்கின்றனர். இது மிகவும் தவறானது. எம்.பி.பி.எஸ் படித்தவர்களும், அறுவைச் சிகிச்சை துறையில் சிறப்பு பட்டம் பெற்றவர்களும் மட்டுமே அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினர்.
மேலும் டாக்டரால் பாதிக்கப்பட்ட சுரேந்திரகுமார் தியாகிக்கு 2.5 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் அவர்கள் உத்தரவிட்டனர். முன்னதாக உத்தரப்பிரதேச மாநில நுகர்வோர் குறை தீர்வு ஆணையம், 1 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.
No comments:
Post a Comment