Friday, July 22, 2011

கழகத்திற்கோர் 'எமெர்ஜென்சி'; கலக்கத்தில் கருணாநிதி..?

தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் குறித்து வரும் புகார் குறித்து நடவடிக்கை  மேற்கொள்ள காவல்துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து அடுத்தடுத்து நில மோசடி வழக்கில் திமுக புள்ளிகள் கைதாவது திமுக தலைவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது போல் தெரிகிறது. 


''ஜெயலலிதா ஆட்சியில் காலையில் ஒரு வழக்கு மாலையில் ஒரு வழக்கு போடுவதால் தி.மு.க.வினர் மீது போடப்படும் வழக்குகளில் வழக்கறிஞர் அணிசார்பில் அவர்களுக்கு உதவவேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

 தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நகர்ப்புறங்களில், பட்டிதொட்டிகளில் ஆங்காங்கு பரவிக் கிடக்கின்ற கழக அமைப்புகளில் விரிசல் உண்டாக்க வேண்டுமென்பதற்காகவும், அந்த அமைப்புகளை நடத்துகின்ற கழகத் தோழர்களிடத்தில் பீதியை உண்டாக்க வேண்டுமென்பதற்காகவும், இப்போது நடைபெறுகின்ற அ.தி.மு.க. ஆட்சியில் நாள்தோறும் காலையிலே ஒன்று, பிற்பகலிலே ஒன்று, மாலையில் ஒன்று என்று வழக்குகள் போடப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளதோடு, தி.மு.க. ஆட்சியில் இது போன்ற தவிர்க்க முடியாத வழக்குகளைப் போடுவதாக இருந்தாலும் அன்றைக்கு இருந்த காவல் துறையினர், உடனடியாக அந்தப்பணிகளுக்கு பாய்ந்து செல்லாமல், கூடுமானவரையில் அவர்களுக்கு நேரம் கொடுத்து ஒரு முறைக்கு இருமுறை எச்சரித்து அதற்குப் பிறகே நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

இதன் மூலம் கருணாநிதி அவர்கள் தனது ஆட்சியில் தவறு செய்பவர்களை உடடியாக கைது செய்யாமல் அவர்களை எச்சரித்து திருந்துவதற்கு வாய்பளித்தாக காட்ட முனைகிறார். கருணாநிதி அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். ஒருவன் சிகரெட் அடிக்கிறான் என்றால் அவனை சில  முறை எச்சரித்து திருத்த முயற்சிக்கலாம். ஒருவன் தண்ணி அடிக்கிறான் என்றால் அவனுக்கும் எச்சரிக்கை செய்து திருந்த வாய்ப்பளிக்கலாம். 

ஆனால் ஒருவன் அடுத்தவனை மிரட்டியோ, அல்லது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தோ ஒருவனுடைய இடத்தை ஆக்கிரமித்தால், அல்லது அடிமாட்டு விலைக்கு வாங்கினால் பாதிக்கப்படவன் கண்ணீரும் கம்பலையுமாக வந்து நின்றால், அவனுக்கு உரிய நியாயம் கிடைக்க சம்மந்தப்பட்ட அபகரிப்பாளரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமா? அல்லது அவனை அழைத்து , ''இந்த ஆளு நிலத்த அபகரிச்சதோட நிறுத்திக்க; இனிமே யாரு நிலத்திலயாச்சும் கை வச்ச... ''ன்னு எச்சரித்து விட்டுறனுமா? என்ன சொல்ல வர்றீங்க கலைஞரே!

அடுத்து, ''நம்முடைய கழகத் தோழர்களுக்கு பாதுகாப்பாக கழகத்தின் சட்டத்துறையினுடைய துணை உண்டு என்பதை எடுத்துக்காட்டுவதற்காக நம்முடைய கழகத்தில் வழக்கறிஞர்கள் அணி என்று ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த அணி இப்போது பணியாற்றுகிறதா இல்லையா என்பது நான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. 

அந்த அணி தலைமைக் கழகத்திலே செயல்படுவதாகக் கூறப்படுகிறது.  நம்முடைய கழக வழக்கறிஞர்கள், கழகத்தினர் மீது போடப்படுகின்ற வழக்குகளையெல்லாம் சந்தித்து, கழக வழக்கறிஞர் அணியின் சார்பாக அவர்களுக்கு உதவி புரியவேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அவர்களும் அந்த முயற்சியிலே ஈடுபடுவார்கள் என்று நம்புகிறேன். ஆம்; நம்பியிருக்கிறேன்!''என்று கலைஞர் விரகிதியோடு கூறுவதை பார்க்கும் போது, ஒன்றை விளங்கிக் கொள்ள முடிகிறது. 

அதாவது தேர்தல் தோல்விக்குப் பின் கழகம் கலைஞரின் கட்டுப்பாட்டில் இல்லை. அல்லது கழகத்தின் பணி மந்தமாக  உள்ளது  என்பதைத்தான் கலைஞரின் வழக்கறிஞர்கள் அணி குறித்த கண்ணோட்டம் சொல்லாமல் சொல்கிறது.

எது எப்படியோ, மத்திய அரசால் குடும்ப உறுப்பினர்கள் உள்ளே போக, மாநில அரசின் நடவடிக்கையால் கழக உறுப்பினர்கள் உள்ளே போக, கலைஞர் வார்த்தையில் சொன்னால் திமுகவுக்கு இது மீண்டும் ஒரு 'எமெர்ஜென்சி' தான். இதிலிருந்து கழகம் மீளுமா? கரையுமா என்பதுதான் இப்போது மக்களின் கூரிய பார்வையின் தேடலாக உள்ளது.
நன்றி: முகவை அப்பாஸ்

No comments:

Post a Comment