நடக்க இருக்கின்ற மழைக்கால நாடாளுமன்ற தொடரில் ஒரு முக்கிய சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. அதுதான் - வகுப்புக் கலவரத் தடுப்பு சட்டமாகும். மகளிர் மசோதா வழக்கம் போல கூறப்பட்டாலும் அது நிறைவேற்றப்பட்ட பின்தான் உறுதியாகச் சொல்ல முடியும். வகுப்புக் கலவரத் தடுப்புச் சட்டம் இதற்கு முன்பேகூட 2005இல் கொண்டு வரப்பட்டு பின் நிறுத்திக் கொள்ளப்பட்டது. இப்பொழுது அறிமுகப் படுத்தப்பட்டுள்ள சட்டத்தில் பல முக்கிய அம்சங்கள் இடம் பெற உள்ளன.
தேசிய அளவிலும், மாநில அளவிலும் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்படவும், பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு நீதியும், இழப்பீடும் வழங்கிடவும் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்கிறது புதிய மசோதா. இதுவரை அமைக்கப்பட்ட ஆணையங்களால் ஏற்பட்ட பலன்கள் என்ன என்ற கேள்வி எழலாம் என்பதால், புதிய ஆணையத்திற்குக் கூடுதல் அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஆலோசனைகள், வழி காட்டுதல்கள் உள்பட இந்த ஆணையம் செய்யும். வர இருக்கும் ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கைகளை விடுவிக்கும். இழப்பீடு என்பது கருணைத் தொகையல்ல - உரிமைத் தொகை என்று கூறப்பட்டுள்ளது. அந்த இழப்பீட்டுத் தொகையும் 30 நாள்களுக்குள் அளிக்கப்பட வேண்டும்.
பலியானவர்களின் குடும்பத் திற்கு ரூபாய் 15 லட்சம், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சத்திற்குக் குறையக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் சட்டத்திற்கு பாரதீய ஜனதா கட்சி எதிர்ப்புக் கொடியைத் தூக்குவதிலிருந்து இந்த மசோதா சரியானதாக இருக்குமா என்று முடிவு செய்யத் தோன்றுகிறது.
இந்த நேரத்தில் மிக முக்கியமாக சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டியவை பல உண்டு. இந்தியாவில் ஒரு பட்டப் பகலில் பல்லாயிரக் கணக்கானோர் ஒன்று சேர்ந்து, 450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை இடித்த கூட்டத்தின்மீது - அதனை இடித்துத் தரை மட்டமாக்க வழிகாட்டிய அந்தப் பெரிய மனுஷன்கள்மீது இதுவரை எடுக்கப் பட்ட நடவடிக்கை என்ன? 19 ஆண்டுகள் உருண்டு ஓடி விட்டனவே.
இடித்தவர்கள் இடிப்புக்குக் காரணமானவர்கள் அதற்குப்பின் இந்திய ஆட்சிப் பீடத்தில் துணைப் பிரதமர் என்கிற அளவுக்கு ஆகி விட்டனரே - சட்டம் தன் கடமையைச் செய்யவில்லையே! இடித்ததோடு அல்லாமல், அப்படி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயிலைக் கட்டப் போவதாக இறுமாப்புடன் பேசித் திரிகிறார்களே - மக்களைக் கூட்டி திரிசூலங்களை வழங்கி சிறுபான்மையினர் மீது ஏவச் சொல்லுகிறார்களே - இவர்கள் மீதெல்லாம் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்கிற போது, இதுபோன்ற சட்டங்களால் யாது பயன்?
குஜராத்தில் நர வேட்டையாடினார் நரேந்திர மோடி - முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை வேட்டையாட முதல் அமைச்சராக இருந்த நரேந்திர மோடியே ஆணை பிறப்பித்தார் - தூண்டினார் என்று குஜராத்தில் காவல்துறையில் உயர்பதவி வகித்தவர்களே கூறிய பின்பும் - சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டதற்காக நரேந்திர மோடிக்குப் பதவி உயர்வாக பிரதமர் பதவியைத் தேடிக் கொடுக்கப் போகிறதாம் பா.ஜ.க. நீரோமன்னன் என்று நரேந்திரமோடியை வருணித்தது உச்சநீதிமன்றம்; இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு மோடிப் பயணம் செய்ய முயன்ற போது நர வேட்டை மோடி இங்கு வரக் கூடாது என்று அந்த நாடுகள் தடை விதித்து விட்டன. உள்நாட்டிலே அவருக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பா?
அதுபோல ஒரிசாவில் கிறித்தவர்களுக்கு எதிராக என்ன நடந்தது?
இந்தக் குற்றவாளிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தந்தால் ஒழிய எந்த சட்டம் வந்தாலும் அதற்கு ஒரு சிறிதும் மரியாதை இருக்கப் போவதில்லை!
புதிய மசோதா தாக்கல் செய்யப்படும் கால கட்டத்திலாவது பழைய குற்றவாளிகளை சிறையில் தள்ளினால் புதிய சட்டத்தின்மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் - செயல்படுமா அரசுகள்?
நன்றி; விடுதலை
No comments:
Post a Comment