Wednesday, July 27, 2011

அதிக புத்தக சுமையால் மாணவர்களுக்கு தண்டுவடம் பாதிப்பு?


கடந்த தி.மு.க., ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், அ.தி.மு.க., அரசிலும் தொடரும் என முதல்வர் தெரிவித்தார். அதன்படி, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கை, கால்களின் நிலையை கண்டறிந்து, முன்கூட்டியே மாற்றுத்திறனாளிகள் உருவாகாமல் தடுக்கும் நோக்கில், "இலவச மருத்துவ முகாம்' நடத்தும் திட்டத்தை முதல்வர் அறிவித்தார்.




தமிழகத்தில், பரீட்சார்த்த முறையில் இரண்டு அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட பிசியோதெரபி முகாம்கள் மூலம், மாணவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான மாணவர்களுக்கு நேரான பாதப் பகுதிகள் மற்றும் அதிகமான புத்தகங்களைச் சுமப்பதால் முதுகுத் தண்டுவட வளைவு உள்ளிட்ட பல்வேறு கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் இல்லாததால், பல்வேறு வகையான இணைப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, யோகா மற்றும் பிசியோதெரபி முகாம்களை நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.


யோகா வகுப்புகளைத் தொடர்ந்து, மாநில அளவில் பரீட்சார்த்த முறையில் சென்னை அடுத்த பம்மல் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், சமீபத்தில் பிசியோதெரபி முகாம்கள் நடத்தப்பட்டன.இந்த இரு பள்ளிகளிலும், தலா பத்து பிசியோதெரபிஸ்ட்டுகள், மாணவர்களை பரிசோதித்தனர். அதில், பெரும்பாலான மாணவர்களுக்கு நேரான பாதங்கள் அமைந்திருப்பது கண்டறியப்பட்டது. பாதத்தின் நடுப்பகுதி, "யு' வடிவில் லேசாக வளைந்திருக்க வேண்டும்.இதற்கு மாறாக, எந்தவித வளைவும் இல்லாமல் நேராக இருப்பது கண்டறியப்பட்டது. இதுபோன்ற பாதங்கள் கொண்டவர்களுக்கு முதுகுவலி வரும் என, பிசியோதெரபிஸ்ட்டுகள் கூறுகின்றனர்.



மேலும், சிறிய வயதில் இருந்தே அதிகமான புத்தகங்களை தினமும் சுமப்பதால், முதுகுத் தண்டுவடம் வளைந்தும், அதனால் பலர் இப்போதே கூன் விழுந்தும் காணப்படுவதாக, பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.அதேபோல், இரண்டு பக்கம் உள்ள தோள்பட்டைகள் சம அளவு கொண்டதாக இருக்க வேண்டும். இதுவும், பல மாணவர்களுக்கு ஒரு பக்கம் தூக்கியும், ஒரு பக்கம் தாழ்வாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரு பள்ளிகளிலும் 30 மாணவர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் இருப்பதாகக் கண்டறிப்பட்டுள்ளது.



இது குறித்து, இணை இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறியதாவது:இந்தியாவில், வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்று பிசியோதெரபி முகாம்கள் நடத்தப்படவில்லை. தமிழகத்தில் தான், முதல் முறையாக நடத்தப்படுகிறது.மாநிலத்தில் 66 கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், பரீட்சார்த்த அடிப்படையில் ஒரு பள்ளியில் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, பம்மல் அரசுப் பள்ளியிலும், ராமாபுரம் அரசுப் பள்ளியிலும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.



வரும் 27ம் தேதி (நாளை) சென்னையில் எழும்பூர் அரசு மகளிர் நடுநிலைப்பள்ளி, நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளி, எழும்பூர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட ஐந்து பள்ளிகளில் முகாம்கள் நடக்கின்றன. அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் பிசியோதெரபிஸ்ட்டுகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள சில பிசியோதெரபிஸ்ட்டுகளை அழைத்து வந்து, இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன.


அனைத்து மாணவர்களையும் பிசியோதெரபிஸ்ட்டுகள் பரிசோதிக்கின்றனர். நேரான பாதங்கள், முதுகுத் தண்டுவடம் பாதிப்பு, சமநிலையற்ற தோள்பட்டை உள்ளிட்ட பிரச்னைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுபோன்று அடையாளம் காணப்படும் மாணவர்களுக்கு, அடுத்த கட்டமாக உரிய சிகிச்சை அளிப்பது குறித்து திட்டமிட்டு வருகிறோம்.இவ்வாறு ராமேஸ்வர முருகன் கூறினார்

No comments:

Post a Comment