49-O என்பது சட்டமோ, அரசாங்க வேட்பாளரோ அல்ல. தேர்தலில் கள்ள ஓட்டு போடும் ஏமாற்றுவேலையை தடுப்பதற்காக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் 1961ல் (The Conduct of Elections Rules, 1961) உள்ள ஒரு விதிமுறை(Rule) தான் இந்த 49-O! ஒரு வாக்காளருக்கு தான் வசிக்கும் தொகுதியில் நிற்கும் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லையென்றால் ஓட்டுப் போடாமல் வீட்டிலேயே இருந்துகொள்வார். ஆனால் அவருடைய ஓட்டை வேறு யாரேனும் தங்கள் விருப்ப கட்சியின் வேட்பாளருக்கு போட்டுவிடுவார்கள். இதுதான் காலம் காலமாக நடக்கும் நம் தேர்தல் சம்பிரதாயம், கலாச்சாரம்! ஆனால் அதைத் தடுப்பதற்காகத்தான் 49-O என்று ஒன்று உள்ளது.
1961 முதலே அமலில் இருந்தாலும் தற்போது ஊடகங்களில் reachஆல் நம் வாயில் மாட்டிய அவலாக அகப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது. நாம் 49-Oவில் நம் ஓட்டைப் பதிவு செய்ய வேண்டுமென்றால் அந்த குறிப்பிட்ட பூத் ஆஃபீசரை அணுகி நம் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும். அவர் வழக்கமாக ஒரு ஓட்டு பதியப்படும்முன் நடத்தப்படும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி சரிபார்ப்பு (identification verifications) வேலைகளையும் செய்து முடித்து நமக்கு ஒரு ஃபார்ம்(form) அளிப்பார். அந்த ஃபார்ம் (form) 17A. அதில் அந்த ஆஃபீசரின் மேற்பார்வையில் 49-O பதிவதற்கான காரணத்தை (remarks) நம்முடைய காரணத்தை எழுதிவிட்டு அதில் நம் கட்டைவிரல் ரேகையையும் பதிவ செய்யவேண்டும்.
இப்படி செய்வதால் நாம் எந்த வேட்பாளருக்கும் ஓட்டுப் போடவில்லையென்றாலும் நாம் ஓட்டுப் போட்டதாகப் பதிவாகிவிடும். அதனால் நம் ஓட்டை வேறு யாராலும் கள்ள ஓட்டாகப் போட முடியாது! ஆனால் இம்முறையில் ரகசியங்கள் காக்கப்படாது. நாம் எந்த வேட்பாளரையும் தேர்ந்தெடுக்காமல் இருக்கும் விஷயம் தெள்ளத்தெளிவாக, கிட்டத்தட்ட அந்த 'பூத்'தில் உள்ள எல்லொருக்குமே தெரியும். இதை மாற்றத்தான் 2004ஆம் ஆண்டும் நம் தேர்தல் ஆணையம், அதற்கு பல பேரிடமும், சமூக அமைப்புகளிடமும் இருந்து வந்த '49-Oவிலும் ரகசியம் காக்கப்பட வேண்டும்' என்று சொன்ன மனுக்களை மதித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சில மாற்றுகளை செயல்படுத்துமாறு சிபாரிசு செய்ததது.
அதாவது ஓட்டுப் போடும் இயந்திரத்தில் எல்லா வேட்பாளர்களின் பெயருக்குப் பின் கடைசியாக "மேற்கண்ட எவருக்கும் இல்லை" (None of the above) என்ற பட்டனையும் வைக்க வேண்டுமென சிபாரிசு செய்திருந்தது. இதைச் செய்வதன் மூலம் ரகசியம் முழுமையாகக் காக்கப்படும். ருஷ்யாவில் இந்த நடைமுறை உள்ளது. ஆனால் இந்த சிபாரிசு மீதான நடவடிக்கை என்ன ஆனது என இந்த நொடி வரைக்கும் செய்தி இல்லை. அதனால் இந்தத் தேர்தலிலும் பழைய form முறையே பயன்பாட்டில் இருக்கும்!
இப்போதுதான் மிகவும் முக்கியமான விஷயம். எதனால் பலர் "49-O போடப்போறேன்", அல்லது "49-O போடுங்க"னு சொல்கிறார்கள் என்றால், ஒரு தொகுதியின் வெற்றி வேட்பாளர் பெரும் வாக்குகளை விட அத்தொகுதியில் 49-O வாக்குகள் அதிகம் பதிவாகியிருந்தால், அந்த வேட்பாளரின் வெற்றி தள்ளுபடி செய்யப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படும் என நினைக்கிறார்கள்! இது முற்றிலும் தவறு. இப்படி நடக்க எந்த சட்டமும் கிடையாது. வெற்றி வேட்பாளர் 49-Oவை விட குறைவாய் ஓட்டு வாங்கியிருந்தாலும் அவரே வெற்றி பெற்றார் என அறிவிக்கப்படுவார்.
இன்னும் கற்பனை வளம் அதிகம் உள்ல சிலர் 49-Oவில் விழும் வாக்குகள் வெற்றி வேட்பாளரை விட அதிகமாய் இருந்தால் அந்தத் தேர்தலில் நின்ற அனைத்து வேட்பாளர்களும் வாழ்க்கை முழுதும் தேர்தலில் நிற்க முடியாதபடி 'life time ban' செய்யப்படுவார்கள் என்று நம்புகிறார்கள்! இது முழுக்க முழுக்க தவறு. இப்படியும் எந்த விதிமுறையும் கிடையாது! வெற்றி வேட்பாளரின் வாக்குகளை விட ஒரு தொகுதியில் 49-O அதிகமாக விழுந்திருந்தால் கூட உங்கள் வாக்கு பதிவாகியிருந்தாலும் அது செல்லாத வாக்கே. நீங்கள் 49-Oவில் உங்கள் வாக்கைப் பதிவு செய்வதால் உங்கள் வாக்கு முறைகேடாகப் பயன்படவிருந்ததை தடுத்திருக்கிறீர்கள், அவ்வளவே!
மேலும் எத்தனை பேர் 49-Oவில் வாக்கைப் பதிந்தார்கள் என்பதைக் கூட வாக்கு எண்ணிக்கை அறிவிக்கும் போது அறிவிக்க மாட்டார்கள். அவ்விவரத்தை நாம் 'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தியே அறிய முடியும். தயவு செய்து இனி 49-O பற்றிய தவறான செய்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம். உங்கள் வாக்கு தவறாகப் பயன்படுத்துவதை விரும்பவில்லையெனில் கண்டிப்பாக 49-Oவைப் பயன்படுத்தி உங்கள் வாக்கைப் பதியுங்கள். அல்லது காலம் காலமாக ஜனநாயகத்தின் வேதவாக்கான 'select the better candidate' என்ற வழக்கத்தின் படி உங்கள் விருப்ப வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.
தற்போது மக்களிடம் ஓட்டுப் போடச் சொல்லி விளம்பரம் செய்யும் தேர்தல் ஆணையம் அவ்விளம்பரத்தில் "உங்கள் விருப்ப கட்சிக்கு வாக்களியுங்கள்" என விளம்பரம் செய்கிறது. "உங்கள் விருப்ப வேட்பாளருக்கு வாக்களியுங்கள்" என்றல்லவா இருக்க வேண்டும். சுயேட்சைகளையெல்லாம் தேர்தல் ஆணையம் புறக்கணிக்க சொல்கிறதா?
நன்றி: தமிழ்நாடுடாக்.காம்
No comments:
Post a Comment