Thursday, April 28, 2011

General Knowledge! ஏன்? எதற்கு? எப்படி?


கடல் எப்படி உருவானது? அதன் பிறப்பு வரலாற்றைக் கொஞ்சம் விளக்குங்களேன்?


இன்றைக்கு சற்றேறக்குறைய 400 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி மிகச் சூடாக இருந்தது. அது மெள்ள ஆறும்போது காற்றும் நீராவியும் பூமியைச் சூழ்ந்துகொள்ள, மேலும் குளிரக் குளிர நீராவி நீராகி, கடலாகி... இப்படி ஒரு 'தியரி'தான் தற்போது செலாவணியில் உள்ளது.


இரண்டு கண், இரண்டு சிறுநீரகம், இரண்டு காது, கை, கால் என்றிருக்கும்போது, மனிதனுக்கு ஏன் இரண்டு இதயங்கள் இல்லை?


இல்லைதான். ஆனால் இரண்டு இதயத்துக்கான செயல்பாடு ஒரு இதயத்திலேயே இருக்கிறது. பிளட்பிரஷர் சரியில்லை. இதயத்துக்கே ரத்த சப்ளை இல்லை என்றாலும் இதயம் மெள்ள மெள்ளப் பெரிதாகி இருபத்தைந்து சதவிகிதம் வரை மோசமாவதை சமாளிக் கிறது. ரத்தக் குழாய்களுக்கு colletral என்ற மாற்றுப் பாய்ச்சல் அமைக்கிறது. அதனால் மனிதனுக்கு ஒண்ணே முக்கால் இதயம் என்று சொல்லலாம்.


'பாரோ ஸாரஸ்' என்கிற அழிந்துபோன மிருக இனத்துக்கு 25 அடி கழுத்து! மூளைக்கு ரத்தம் அனுப்ப அதற்கு ஒரு இதயம் போதாது என்றும் ரிலே ரேஸ் போல எட்டு இதயம் தேவைப்பட் டிருக்கும் என்றும் கணிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த ரத்த ஓட்ட பிரச்னையால்தான் காலவாக்கில் அந்த மிருகமே வழக்கொழிந்து போய்விட்டது. அதாவது மூளைக்கு முழு ரத்தம் போகவில்லை. செங்குத்தாக நிமிர்ந்து நின்றாலே அந்த மிருகத்துக்கு பலவீனமும் மயக்கமும் வந்திருக்க வேண்டும்

ஒரு உயிர்கூட சேதமில்லாமல் நடந்த உலகின் மிகப்பெரிய மீட்புப்பணி எது?


உலகின் மிகப்பெரிய மீட்புப்பணி... இரண்டாம் உலகப் போரில் டன்கர்க் சம்பவம்தான். ஜூன் 1940-ல் பிரெஞ்சு தேசத்து கடற்கரையில் மாட்டிக்கொண்டு பின்வாங்கிய மூன்று லட்சம் பிரிட்டிஷ், அமெரிக்க, பெல்ஜிய துருப்புக்களைப் பத்திரமாக கொண்டு சேர்த்தது இங்கிலாந்து டீம். உயிர்ச்சேதம் இல்லை என்று உத்தரவாதமாகச் சொல்ல முடியாது. அத்தனை பிரமாண்டமான மீட்புக்கு மிகக் குறைவான உயிர்ச்சேதம்தான்.

இமயமலையின் உச்சி பகுதியில் 'கடல் வாழ் தாவரங்கள்' - உள்ளதாகப் படித்தேன் - இது பற்றி...


இருபத்திரண்டரைக் கோடி வருஷங்களுக்கு முன் ஆஸ்திரேலியா பக்கத்தில் ஒரு பெரிய தீவாக இந்தியா இருந்தது. மெல்ல அது வடமேற்காக நகர்ந்தது. ஒவ்வொரு நூற்றாண்டும் ஒன்பது மீட்டர். ஒரு காலகட்டத்தில், தற்போதைய ஆசியாவிலிருந்து 6400 கிலோமீட்டர் தெற்கில் இருந்தோம். ஆசிய ஐரோப்பிய கண்டத்துடன் நாளடைவில் முட்டி மோதி ஒட்டிக்கொண்டபோது, அந்த மோதலில் எழுந்ததுதான் இமயமலை. அதனால்தான் இமயத்தின் உச்சியில் கடல் வாழ் தாவரங்களின் ஃபாசில்கள் கிடைத்தன. இன்றைய கணக்கின்படி எவரெஸ்ட் சிகரம் வருஷத்துக்கு 3 மில்லி மீட்டர் உயர்ந்து வருகிறது. 27 மில்லி மீட்டர் வடகிழக்காக நகர்கிறது. கொஞ்சம் காத்திருந்து பாருங்கள் தெரியும்.

சந்திரனில் காற்று இல்லாதது ஏன்


பூமியின் புவியீர்ப்பு விசையை காட்டிலும் சந்திரனில் ஈர்ப்புவிசை ஆறுமடங்கு குறைவு.பூமியில் புவியீர்ப்பு விசை அதிகமாக இருப்பதினால் தான் பூமி காற்று மண்டலத்தை இழுத்து பிடித்து வைத்திருக்கிறது. ஆனால் சந்திரனில் ஈர்ப்புவிசை குறைவாக இருப்பதினால் தான் சந்திரனால் காற்று மண்டலத்தை இழுத்து பிடித்து வைத்திருக்க முடியவில்லை அதனால் தான் சந்திரனில் காற்று இல்லை.


பாங்காக்கிலிருந்து 550 கிலோ மீட்டர் தூரத்தில் பர்மா எல்லையில் 'மேஸோட்' என்ற மலைப்பகுதி உள்ளது. இங்கு குறிப்பிட்ட ஓர் இடத்தில் Magic Hill என்ற போர்டு வைத்து ரோட்டில் மார்க் செய்திருக்கிறார்கள். அந்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு, நியூட்ரலில் போட்டு இன்ஜினை ஆஃப் செய்துவிட்டாலும் ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 150 அடி தூரத்துக்குச் செல்கிறது. இத்தனைக்கும் மேடான பாதை அது. அதேபோல் திரும்பி வரும்போது அந்த கோட்டுக்கு அருகில் காரை நிறுத்தினால், கார் அப்படியே பின்னோக்கி மேட்டில் தானாகவே ஏறுகிறது. அந்த 150 அடி தூரத்தில் அப்படி என்ன புவிஈர்ப்பு மாற்றம் நிகழ்கிறது? புரியலையே சார்!


இதே போல் கலிஃபோர்னியாவில் ஒரு சுற்றுலா இடம் இருக்கிறது. சரிவோ, ஏறுமுகமோ பக்கத்தில் இருக்கும் கட்டடம் அல்லது மலை அதை ஒப்பிடும்போது, சரிவு மேடு மாதிரித் தோன்றும். இதை Perspective Dodge என்பர். எக்காரணம் கொண்டும் புவிஈர்ப்பை நம்மால் மீற முடியாது. அடுத்த முறை அங்குபோகும் போது ஒரு ஸ்பிரிட் லெவலை (கட்டடப் பணியில் பயன்படுத்தப்படும் ரசமட்டக் கோல்) எடுத்துப் போய் அந்த இடத்தில் வைத்துப் பாருங்கள்.

தவளையின் கண் அமைப்புத் தத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியுமானால், அதைப் பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சிமுதலிய துறைகளில் எண்ணற்ற வகைகளில் பயன்படுத்த முடியும் என்ற தகவலை ஒரு பழைய பத்திரிகைத் துணுக்கில் படித்தேன். தவளைக் கண்ணில் அப்படி என்ன சிறப்பம்சங்கள் உள்ளன?


தவளையின் கண்களில் சிறப்பம்சம் எனக்குத் தெரிந்தவரை அவைகள் இரையை முழுங்குவதற்கும் கண்கள் உதவுகின்றன என்பதே. ஒரு பூச்சியை நாக்கை நீட்டி ஒட்டவைத்து உள்ளே தள்ளும்போது கண்களும் உள்ளே சென்று, சாப்பிட்டதை தொண்டை வழியாகத் தள்ள உதவுகின்றன. நாம் பாதாம் அல்வா முழுங்கியபின் ஒரு நிமிஷம் அதன் டேஸ்ட்டை ரசிக்க
கண்ணை மூடிக் கொள்வதில்லையா? மேலும் அவைகள் ஏறக்குறைய 270 டிகிரி சுற்றிப் பார்க்கவல்லவை.

பரிணாம வளர்ச்சியில் தற்போதைய கடைசி நிலை ஆறறிவு படைத்த மனிதன் என்றால், நமக்கு அடுத்த நிலை ஏழாவது அறிவு என்னவாக இருக்கும்?


ஏழாவது அறிவு என்றால் அது அறிவியல்தான். மனிதன் தன் கண், காது, மூக்கு போன்ற அவயங்களின் திறமையை அறிவியல் உபகரணங்கள் கொண்டு நீட்டித்திருக்கிறானே. டெலஸ்கோப், மைக்ராஸ்கோப், சாட்டிலைட், டெலிவிஷன் மூலம் பார்வையை நீட்டித் திருக்கிறான். ஏரோப்ளேன் மூலம் பறக்க முடியாததைப் பறக்க வைத்திருக்கிறான். மெஷின்கள் மூலம் கைகளின் திறமையை நீட்டித்திருக்கிறான். கம்ப்யூட்டரின் மூலம் மூளையின் திறமையை! ஏழாவது என்ன.. எட்டு, ஒன்பது, பத்து என்று எங்கேயோ போய்விட்டான்.

தற்போது பிளாட்டினம் நகைகள் பரபரப்பாகப் பேசப்படுகிறதே, தங்கத்தைவிட பிளாட்டினம் எந்தவகையில் உசத்தி?


பிளாட்டினம் சங்கிலிகள் ஒற்றை வைரத்தை பென்டென்ட்டாக அணிந்துகொள்ள தற்போது பணக்காரர்களால் விரும்பப்படுகிறது. அது தங்கத்தைவிட விலை அதிகமானது. அதேசமயம் ரோடியம்தான் இன்னும் அதிக விலை. ஒரு கிராம் ஐயாயிரம் ரூபாய்க்குக் கிட்டே.. பிளாட்டினம் மிக உறுதியானது. பகட்டில்லாமல் அணிவதற்கு ஏற்ற நகை. கழுத்தில் என்ன என்று யாராவது கேட்டால் பிளாட்டினம் செயின் என்று பதில் வந்தால் வாயைப் பிளக்கவும்.

தகவல்:    சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி? என்ற நூலிலிருந்து..

No comments:

Post a Comment