Sunday, April 10, 2011

இலவச கல்வி, லேப்டாப், வாஷிங் மெஷின்; என்.ஆர்.காங்கிரஸ் அதிரடி

புதுவை: என். ரங்கசாமி தலைமையிலான  என்.ஆர்.காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை இன்று புதுவையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை புதுவை முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி வெளியிட்டார்.  
அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு...
மத்திய அரசின் புதிய ஜாதி வாரி கணக்கெடுப்பின்படி விகிதாச்சார அடிப்படையில் அந்தந்த ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் `வாஷிங்மெஷின்' இலவசமாக வழங்கப்படும்.
 10-ம் வகுப்பு, மெட்ரிக்குலேசன் மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளில் பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு இருசக்கர மோட்டார் வாகனம் வழங்கப்படும்.

10-ம் வகுப்பு முடித்து அனைத்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் இலவசமாக கம்ப்யூட்டர் வழங்கப்படும்.  என்ஜினீயரிங் மற்றும் மருத்துவம் சார்ந்த உயர்கல்வி படிக்கிற மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக `மடிகணினி' (லேப்டாப்) வழங்கப்படும்.  அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச மாக கல்வி வழங்கப்படும்.  ஆதிதிராவிட மற்றும் மிகவும் பிறப்டுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்க காரைக்கால், புதுவையில் உறைவிட பள்ளிகள் அமைக்கப்படும்.

கல்லூரி மாணவ- மாணவிகளுக்கும் இலவச பஸ்பாஸ் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு பகுதிநேர வேலை கிடைக்கும் வகையில் `பெருந்தலைவர் காமராஜர் இரவு பாடசாலை' என்ற பெயரில் புதிய திட்டம் உருவாக்கப்படும். அரசு வேலை வாய்ப்புகள் இதுவரை கிடைக்கப்பெறாத குடும்பங்களில் உள்ள ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் அனைவருக்கும், அனைத்து பள்ளி நாட்களிலும் மதிய உணவுடன் முட்டையும் வழங்கப்படும். 60 வயது கடந்த தாயாரின் பெயரில் பிள்ளைகள் வாங்கும் சொத்துக்களுக்கு முத்திரைத்தாளில் 75 சதவீதம் விலக்கு அளிக்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சீராட்டி வளர்க்க திருமணத் தொகை வழங்கப்படும். திருமணத்தொகை தக்கவைப்பு நிதியாக  வைக்கப்பட்டு குழந்தைகளின் திருமண வயதின்போது வழங்கப்படும்.

முதியோர், விதவைகள், முதிர்கன்னிகளுக்கு ரூ.2 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு சலுகையுடன் மருத்துவ வசதி செய்து தரப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பேறுகால நிதியாக தவணை முறையில் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் உதவித் தொகை சதவீத அடிப்படையில் ரூ.3 ஆயிரம் வரை வழங்கப்படும். 85 வயது முதியவர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இரு கண்களும் பார்வை இழந்தவர்களுக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

விடுதலை போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.  வீடற்ற மற்றும் சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்காக இலவச அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாக்கப்படும்.  புதுவை-சென்னை ஈ.சி.ஆர்.சாலையில் புதுவை மென்பெருள் நகரம் தொடங்கப்படும். சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவி குழுவின் தலைவிக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்படும். சுயஉதவி குழுக்களுக்கு வங்கிகள் வழங்கும் கடனுதவியில் 25 சதவீதம் மானியத்தை அரசே ஏற்றுக் கொள்ளும். என்ற பல அம்சங்கள் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பு மற்றும் பல நல்ல திட்டங்கள் சொல்லப்பட்டிருப்பதும் குறிப்பாக கல்விக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
puduvai, rangasamy, n.r.congress, e.c.r election
 நன்றி: இந்நேரம்.காம்

No comments:

Post a Comment