ஓசோன் மண்டலம் என்பது வளிமண்டலத்தில் உள்ள (ஓசோன்-O3 ) ஒருவகை காற்றுப் படலம்தான். சூரியனில் இருந்து உமிழப்படும் ஆபத்தான புறஊதாக்கதிர்களை பூமியில் விழாமல் தடுப்பது ஓசோன் அடுக்குதான். 93 முதல் 99 சதவீத புறஊதாக் கதிர்களை `ஓசோன் படலம்` கிரகித்து விடுவதால்தான் நம்மால் இங்கு நிம்மதியாக வாழ முடிகிறது. இந்தப் படலத்தில் துளை விழுந்திருப்பதால்தான் சமீபகாலமாக வெப்பம் அதிகரித்துள்ளது. காற்று மாசுபடாமல் தடுப்பதன் மூலம் ஓசோன் படலம் சேதமடையாமல் பார்த்துக் கொள்ளலாம்.
ஓசோன் படலம் தரையில் இருந்து 10 கி.மீ. முதல் 50 கி.மீ. வரையுள்ள காற்றுமண்டலத்தில் காணப்படுகிறது. பிரஞ்சு இயற்பியல் வல்லுனர்கள் சார்லஸ் பேப்ரி, ஹென்றி புய்சன் ஆகியோர் (1913-ல்) ஓசோன் படலத்தை கண்டுபிடித்தனர். `சிட்னி சேப்மேன்’ என்ற இங்கிலாந்து விஞ்ஞானி (1930-ல்) இரு அணுநிலை ஆக்சிஜனும், ஒரு முழு ஆக்சிஜனும் இணைந்ததே ஓசோன் (O3) என்று கண்டுபிடித்தார். சூரியஒளியில் உள்ள புற ஊதாக்கதிர் தாக்குவதால் ஆக்சிஜன் அணுக்களில் ஏற்படும் மாற்றமே ஓசோனை தோற்றுவிக்கிறது என்றார். மற்றொரு இங்கிலாந்து ஆய்வாளர் டோப்சன், ஓசோனின் அடர்த்தியை அளவிடும் `ஸ்பெக்ட்ரோபோட்டோ` மீட்டரை (டோப்சான் மீட்டர்) உருவாக்கினார்.
ஓசோன் மூலக்கூறும் நிலையற்றது தான். புறஊதாக்கதிரின் தாக்குதலால் உருவாகும் ஓசோன் அணுக்கள் மீண்டும் அந்த கதிர்கள் தாக்கும்போது அணுநிலை ஆக்சிஜனாகவும், ஆக்சிஜனாகவும் பிரிகிறது. இது ஓசோன்-ஆக்சிஜன் சுழற்சி எனப்படுகிறது. ஸ்ட்ரேடோஸ்பியர் (50 கி.மீ. உயரத்திற்குள்) அடுக்கில் உருவாகும் ஓசோன் படலம் மட்டுமே இந்த சுழற்சிக்கு தப்பி நிலைக்கிறது. அதற்கு மேலுள்ள ஓசோன் அணுக்கள் இந்த சுழற்சியால் சிதைந்து விடுவதும், மீண்டும் உருவாவதுமாக இருக்கிறது. ஸ்ட்ரேடோஸ்பியர் அடுக்கில் மட்டும் 90 சதவீத ஓசோன் படலம் இருக்கிறது.
ஓசோனின் செறிவு மிகவும் குறைவாக இருப்பது உயிரினங்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. ஏனெனில் செறிவு குறைந்த ஓசோன் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களை மிகுதியாக உட்கிரகிக்கிறது. புறஊதாக் கதிர்கள்(UV) அதன் அலைநீளத்தைச் சார்ந்து யு.வி. – ஏ, பி, சி என மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. UVA (400315 நா.மீ ), UVB (315280 நா.மீ ) மற்றும் UVC(280 – 100 நா.மீ.) அலை நீளம் கொண்டது. `சி` புறஊதாக்கதிர் (UVC) மனிதர்களுக்கு மிகவும் தீங்கிழைக்கக் கூடியது. UVB கதிர்களால் தோல் புற்றுநோய் ஏற்படலாம். UVA கதிர் மரபு சார்ந்த பாதிப்புகளை உருவாக்கும் ஆற்றலுடையது.
அண்டார்டிக்கில் ஓசோன் ஓட்டை இருப்பது அமெரிக்காவில் 1985-ம் ஆண்டில் கண்டறியப்பட்டது. 1978-ம் ஆண்டில் அமெரிக்கா, கனடா மற்றும் நார்வே போன்ற நாடுகள் குளோரோபுளோரோ கார்பன் உள்ள பல பொருட்களை பயன்படுத்த தடை விதித்தன. குளிர்பதனம் மற்றும் தொழிலகத் தூய்மை பணிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. `த மோன்ட்ரியல் புரோட்டோக்கால்’ என்ற சர்வதேச உடன்பாட்டின் படி 1987 முதல் சிதிசி உற்பத்தி கடுமையாகக் குறைக்கப்பட்டு 1996-ம் ஆண்டு பெருமளவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஓசோன் ஓட்டை பெரிதாவது தடுக்கப்பட்டுள்ளது.
தகவல்: உங்களுக்காக
No comments:
Post a Comment