Wednesday, April 13, 2011

புதுவையில் 85 % வாக்குப்பதிவு! தேர்தல் ஆணையம்


 புதுவை: நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இன்றைய மாலைநேர நிலவரப்படி சுமார் 85.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புதுவை சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஏப்ரல் 13ம் தேதி புதன்கிழமை காலை 8 மணிக்கு துவங்கியது. இதற்காக அங்கு மொத்தமுள்ள 23 தொகுதிகளில் 638 வாக்குச்சாவடிகள், 13 துணை வாக்குசாவடிகள் ஏற்படுத்தப்பட்டன.
இதில் 84 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 8 மணிக்கு துவங்கியபோதிலும், 7.30 மணிக்கே வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் குவிய துவங்கினர். ஆண்களை விட பெண்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.
புதிதாக வக்களிக்க வந்த 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் உற்சாகத்துடன்,  ஜனநாயக கடமை ஆற்றிய உற்சாகத்தில் காணப்பட்டனர்.  காலை 10 மணி நிலவரப்படி 40 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. பதிவான விபரங்கள் தெரியவந்த நிலையில், மாலை 3 மணி நிலவரப்படி 60.88 சதவீத வாக்குகள் பதிவானது. முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்ற எழுச்சியை மக்களிடையே காண முடிந்தது.
பதட்டம் நிறைந்ததாக கருதப்பட்ட வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால், அங்கு பிரச்னைகள் தவிர்க்கப்பட்டன. இறுதியாக 5 மணி நிலவரப்படி சுமார் 85.52 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் துறை தெரிவித்துள்ளது. மாலை 5 மணிக்குள் வந்த வாக்காளர்கள் வாக்களிக்கவும் தேர்தல் துறை ஏற்பாடு செய்திருந்தன.
வாக்குப்பதிவிற்கு பின்னர் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. இந்த வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
puduvai, vote, election, pollig booth commision

No comments:

Post a Comment