Friday, April 15, 2011

ஆழிப்பேரலை (Tsunami) எப்படி ஏற்படுகிறது..!

கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன. இது கரையைத் தாண்டி சேதத்தை ஏற்படுத்துவதை சுனாமி என்கிறோம். கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் கடினமான மேற்பகுதி, நிலநடுக்கத்தால் ஆட்டம் காண்கிறது. இதனால் ஏற்படும் மிகப்பெரும் விசையின் காரணமாக நீர் தரைப்பகுதிக்கு வந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது.சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. நிலநடுக்கம் ஏற்படும் அளவை பொறுத்து, இதன் வேகம் பலமடங்கு அதிகரிக்கும். சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் வல்லமை சுனாமிக்கு உண்டு.

சுனாமி என்ற வார்த்தை ஜப்பான் மொழியில் இருந்து தான் வந்தது. இதற்கு துறைமுகம் மற்றும் அலைகள் என்று பொருள். சிறிய உயரமுடைய அலைகள், சுனாமியால் பெரிய அலைகளாக மாறுகின்றன. சுனாமி ஏற்படும் போது கடற்கரையில், அலையின் உயரம் நிலநடுக்கத்தின் அளவுக்கு ஏற்ப இருக்கும். கரையில் இருந்து அதன் உயரத்துக்கு ஏற்ப கடல்நீர், தரைப்பகுதிக்குள் ஊடுருவும். பின், இந்த பெரிய அலைகள் தரையில் பரவிய இடத்துக்கு பின்னே, தொடர்ந்து நீர் அலைகள் வேகமாக முன்னேறிக் கொண்டே இருக்கும். சுனாமி அலைகளின் உயரத்துக்கு ஏற்ப அதன் சேதம் இருக்கும்.சுனாமி அலைகளின் தாக்கத்துக்கு பின், அந்த தரைப்பகுதியில் பெரிய மாற்றம் இருக்கும். இப்படி கடல்நீர் சுனாமி அலையின் மூலம் இடம் பெயர்வதால், முன்னர் நிலப்பகுதியாக இருந்தவை நீராகவும், நீர்ப்பகுதி நிலமாகவும் மாற வாய்ப்புண்டு.
ஜெட் வேகத்தில் சீறும் சுனாமி :  கடற்பரப்புக்கு கீழ், கண்ணுக்கு தெரியாத சிறிய வடிவத்தில் சுனாமி உருவாகும். கடலின் மேல் பகுதியில் இருக்கும் கப்பலில் கூட, சுனாமி உருவாவதை உணர முடியாது. ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே, இந்த சுனாமி மிகப்பெரிய அளவில் உருவாகி, கடல் பரப்பு முழுவதும் வேகமாக பரவும்.
* சுனாமி என்பது ஒரே ஒரு அலையால் மட்டும் ஏற்படுவது அல்ல. அடுக்கடுக்கான பல அலைகளால் உருவாகும். இந்த அலைகள், கடற்பரப்பு முழுவதும் பரவி, கரையை நோக்கி, மணிக்கு 1,000 கி.மீ., வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்லும். இந்த அலைகளின் வேகம், ஜெட் விமானத்தின் வேகத்துக்கு சமமானதாக, சில சமயத்தில் கூடுதலாக கருதப்படுகிறது.

* சுனாமி அலைகள் கரையை நோக்கி அதிவேகமாக சீறிப் பாய்ந்து செல்லும்போது, கடலுக்குள் இருந்த தண்ணீரின் கணிசமான பகுதி காலியாகி விடும். கடலின் கீழ்ப்பரப்பில் உள்ள பவளப் பாறைகள் கூட, கண்ணுக்கு தெரியும். அந்த அளவுக்கு, தரைப்பகுதி தெரியும்.

* சுனாமி அலைகள் மிகவும் பிரமாண்ட உயரத்தில் வருவதால்தான், அழிவு ஏற்படுவதாக தவறான கருத்து கூறப்படுகிறது. கடலில் உள்ள பெரும்பகுதி தண்ணீர், வெள்ளமென புறப்பட்டு வருவதன் காரணமாகவே அழிவு ஏற்படுகிறது. கடலில் இருந்து வேகமாக வரும் வெள்ளம், அதன் பாதையில் உள்ள அனைத்து பொருட்களையும் துவம்சம் செய்து விடும். இதன்பின், அந்த நீர் வேகமாக கடலுக்கு திரும்பும். சுனாமி அலைகள் கரையை நோக்கி வரும்போது, ஒருசிலர், அதை சமாளித்து தப்பி விட முடியும். ஆனால், சுனாமி அலைகள், கடலை நோக்கி வேகமாக திரும்பும்போது, கடலுக்குள் எல்லாமே அடித்துச் செல்லப்படும்.


உலகில் ஏற்பட்ட சுனாமி தாக்குதல்கள் : இதுவரை உலகில் சுனாமி அலைகளின் தாக்குதலால் ஏராளமான உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அவை:
1700, ஜனவரி: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா, ஓரிகன், வாஷிங்டன் மற்றும் கொலம்பியா நகரங்களை பூகம்பம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோளில் 9 புள்ளிகள் இருந்தது. இதனை தொடர்ந்து ஜப்பானை சுனாமி தாக்கியது.

1730, ஜூலை: சிலி நாட்டில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில் 3 ஆயிரம் பேர் பலியானார்கள்.

1755, நவம்பர்: போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமியால் 60 ஆயிரம் பேர் பலியானார்கள்
1868, ஆகஸ்ட்: சிலியில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக தோன்றிய சுனாமி அலைகள், தென் அமெரிக்காவை தாக்கின. இதில் 25 ஆயிரம் பேர் இறந்தனர்.
1906, ஜனவரி: ஈகுவெடார் மற்றும் கொலம்பியா கடற்கரையில் ரிக்டர் அளவில் 8.8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 500 பேர் சிக்கி பலியானார்கள்
1946, ஏப்ரல்: யுனிமாக் தீவுகளில் ரிக்டர் அளவில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அலாஸ்காவை சுனாமி அலைகள் தாக்க, 165 பேர் பலியானார்கள்.
1960, மே: தெற்கு சிலியில் ரிக்டர் அளவில் 9.5 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 1,716 பேர் பலியானார்கள்.
1964, மார்ச்: அமெரிக்காவின் பிரின்ஸ் வில்லியம் சவுண்டு பகுதியில் 9.5 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன்காரணமாக அலாஸ்காவை சேர்ந்த 131 பேர் பலியானார்கள். 128 பேர் சுனாமியில் சிக்கி இறந்தனர்.
1976, ஆகஸ்ட்: பிலிப்பைன்ஸ் நாட்டில் 9.2 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுனாமி தாக்கி 5 ஆயிரம் பேர் பலியானார்கள்.
2004, டிசம்பர்: இந்திய பெருங்கடலில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுனாமி அலைகள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.
2007, ஏப்ரல்: சாலமன் தீவுகளில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 28 பேர் பலியானார்கள்.
2009, செப்டம்பர்: தெற்கு பசிப்பிக் பகுதியில் ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 194 பேர் பலியானார்கள்.
2010 ஜனவரி: ஹெய்தியில் ரிக்டர் அளவில் 7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில்சுமார் 3 லட்சம் பேர் பலியானார்கள்.
அக்டோபர்: இந்தோனேசியாவில் சுனாமி மற்றும் எரிமலை சீற்றத்தால் 500 பேர் பலியானார்கள்.
2011, மார்ச்: ஜப்பானில் ரிக்டர் அளவில் 8.9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராட்சத சுனாமி அலைகள் ஜப்பானை தாக்கியது.

Tags: tsunami, japan, earth quake, rector, waves,  sea

No comments:

Post a Comment