கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, எல்லா துறைகளும் சிறப்பாக அமைய வாய்ப்பு உள்ளது. வேலைவாய்ப்பு, சம்பளம், சந்தர்ப்பங்கள், பொருளாதாரம் என, எதிலும் ஏற்றம் காணப்படுகிறது. எனவே, ஆரோக்கியத்தில் மக்கள் கவனம் செலுத்தும் நேரம் வந்து விட்டது. உடற்பயிற்சி செய்வது ஒன்றே, ஆரோக்கியத்திற்கான சிறந்த வழி. “உடற்பயிற்சியை எப்படி துவங்குவது. 100 மீட்டர் எல்லாம் என்னால் நடக்க முடியாது’ என, மக்கள் சொல்வது தெரிகிறது. சிறு வயது முதலே, நடைபயிற்சியை துவங்க வேண்டும். “என் குழந்தைகள் படிப்பில் மும்முரமாக உள்ளனர்’ என்பதும் என் காதில் விழுகிறது.
உடலில் சக்தியும், ஆரோக்கியமும் இருந்தால் தான், வாழ்க்கையை நல்ல முறையில் அனுபவிக்க முடியும். இந்த இரண்டு விஷயங்களையும் பணம் கொடுத்து வாங்க முடியாது. உங்கள் உழைப்பு தேவை. வீட்டுக்கு வெளியில் நடைபயிற்சி துவக்குங்கள். வீட்டைச் சுற்றியே அது அமைந்து விட்டால், தொடர்ந்து நடக்க முயல்வீர்கள். உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நடக்கலாம். முதலில் 15 நிமிடம்; பின், மேலும் 10 நிமிடத்தை கூட்டிக் கொள்ளுங்கள். பின், மெதுவாக ஒரு மணி நேரம் நடக்க துவங்குங்கள். தினமும் 4 – 5 கி.மீ., நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். பின், மெதுவான ஓட்டத்தை துவக்கலாம். வாய் திறந்து பேச முடியாத அளவுக்கு, உங்கள் வேகத்தைக் கூட்டிக் கொள்ளலாம். பின், மெதுவாக 10 நிமிடம் நடை; மீண்டும் ஓட்டம். இது போன்று ஒவ்வொரு இரண்டு வாரத்திற்கும் செய்து கொள்ளுங்கள். வாரத்திற்கு 3 – 4 நாட்களும், நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரமும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று, நான்கைந்து ஆண்டுகளாகப் பரிந்துரைக்கப்படுகிறது. பாத்ரூம் செருப்பைப் போட்டு நடை பயிலக் கூடாது. காலுக்கேற்ற ஷூ அணிந்து நடக்க வேண்டும்.
தினமும் இரண்டு வேளை நடைபயிற்சி மேற்கொண்டால், ஆரோக்கியம் இன்னும் நல்ல முறையில் செழிக்கும். ஓட்டப் பயிற்சியின் போது பெறும் ஆரோக்கியம் இதில் கிடைக்காது எனினும், உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தைப் பேணலாம். நடை பயிற்சியோ, ஓட்டப் பயிற்சியோ, அதற்கேற்ற சரியான உடையை அணிவதும் அவசியம். முந்தைய கட்டுரைகளில் கூறியது போல், ஓட்டப் பந்தய வீரர்கள் அணியும் பருத்தியாலான சாக்ஸ், உடைகள் அணிவது அவசியம். தசையை பலப்படுத்தும் உடற்பயிற்சிகளும் செய்தால், மூட்டு இணைப்புகள் உட்பட பல உறுப்புகள் நல்ல நிலையில் இயங்கும். ஓட்டப் பயிற்சி, நடைபயிற்சி ஆகியவை இடுப்பு சதையைக் குறைக்கவும், ஒட்டுமொத்த உடல் எடையைக் குறைக்கவும் உதவும். இடுப்பு வளைவை சீராக்கி, ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, இருதய நோய், நீரிழிவு, புற்றுநோய், பக்கவாதம், எலும்பு முறிவு, மனநலம் பாதித்தல் ஆகியவை ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது. மன அழுத்தம், தூக்கமின்மையும் “டாட்டா’ சொல்லி விடும். குழந்தைகள் தினமும் ஒரு மணி நேரம் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும்.
அதிக போக்குவரத்து, பூங்காக்கள் இல்லாமை ஆகிய காரணங்களால், தற்போது இது சாத்தியமில்லை. எனவே அவர்கள், “டிவி’ முன் அமர்ந்து விடுகின்றனர். “டிவி’யில் வேகமாக நகரும் காட்சிகள், குழந்தைகளின் மூளையில் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதால், அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை. பல பள்ளிகள், விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே தனியார் விளையாட்டுப் பயிற்சிக் கூடத்தில் குழந்தைகளை சேர்க்க வேண்டியுள்ளது. இதற்கு, அதிகப் பணம் செலவாகிறது. எனவே, குழந்தைகள் மூன்றாம் வகுப்புப் படிக்கும் போதே, தினமும் அரை மணி நேரம் ஓட்டப் பயிற்சி செய்ய வைப்பது நலம்.
No comments:
Post a Comment