Monday, April 25, 2011

மாணவிக்கு மது கொடுத்து வன்புணர்வு! மூவர் கைது


புதுவை: பத்தாம் வகுப்பு மாணவிக்கு கட்டாயப்படுத்தி மது கொடுத்து 3 நபர்கள் சேர்ந்து கூட்டாக வன்புணர்வு செய்து அதை செல்போனில் படம் பிடித்து மிரட்டிய சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  புதுச்சேரி மேட்டுப் பாளையத்தை அடுத்த தர்மாபுரியை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் புனிதா (16) இவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு அங்குள்ள கணினி பயிற்சி பள்ளியில் கணினி கல்வி பயின்று வந்தார். அதே பகுதியை சேர்ந்தவரும் பாண்லே நிறுவனத்தில் வாகன ஓட்டுனராகவும் வேலை பார்த்து வரும் கார்த்திக் (20) என்பவருடன் மாணவி புனிதா நண்பராக பழகி வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று கணினி வகுப்புக்கு வந்த புனிதாவை, கார்த்திக் தனது தாய் அழைப்பதாக கூறி வீட்டுக்கு அழைத்து சென்றார். ஆனால் வீட்டில் கார்த்திக்கின் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் முத்து (19), மற்றொரு பாண்லே வாகன ஓட்டுனர் அன்பு (19) ஆகியோர் இருந்தனர். இவர்கள் 3 பேரும் புனிதாவின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றினர்.

மயங்கிய புனிதாவை மூவரும் வன்புணர்ந்துள்ளனர். மேலும் இதனை அவர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்து கொண்டதாகவும் அதனை வைத்து புனிதாவை கார்த்திக் மிரட்டியதாக தெரிகிறது. இதற்கிடையே கார்த்திக் செல்போன் படத்தை காட்டி புனிதாவை அடிக்கடி ஆசைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. நேற்றும் இதுபோல் கார்த்திக் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் புனிதா மனச்சோர்வுடன் வீட்டுக்கு வந்தார். வாடிய முகத்துடன் வந்த புனிதாவிடம் அவரது தாய் வினோதா என்ன நடந்தது என்று கேட்டார். புனிதா நடந்த விவரங்களை தன் தாயிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து வினோதா, புனிதாவுடன் சென்று இது குறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையில் புகார் செய்தார். ஆய்வாளர் பாஸ்கரதாஸ், உதவி ஆய்வாளர் மூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வன்புணர்வால் பாதிக்கப்பட்ட புனிதாவை மருத்துவ பரிசோதனைக்காக புதுவை அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புனிதாவை வன்புணர்ந்து செல்போனில் படமெடுத்து மிரட்டிய கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் முத்து, அன்பு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Girl student forced drunk and  raped! 3 arrested

No comments:

Post a Comment